அறிவாலயத்தில் அணிவகுக்கும் நாம் தமிழர் கட்சியினர்!

Published On:

| By Selvam

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3,000-க்கும் மேற்பட்டோர் இன்று (ஜனவரி 24) முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி தலைமையில் இணைகின்றனர்.

இதுதொடர்பாக எங்க அடிச்சா வலிக்குமோ… சீமானுக்கு அடுத்த ஷாக்! ஸ்டாலின் செய்யும் சம்பவம் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று (ஜனவரி 23) நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

உட்கட்சி பிரச்சனை காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக வெளியேறினர். பெரியார் குறித்த சீமானின் சமீபத்திய பேச்சால் அதிருப்தியடைந்த சில மாவட்ட நிர்வாகிகளும் வெளியேறினர்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை ஒருங்கிணைக்கும் பணியை திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி மற்றும் இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் ஆகியோர் மேற்கொண்டனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் மற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை ஜோயல் மேற்கொண்டார்.

இந்தநிலையில், திமுகவில் இணைவதற்காக இன்று காலையிலேயே நாம் தமிழர் நிர்வாகிகள் அறிவாலயத்தில் குவியத்தொடங்கினர். சில நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சி மீதான தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நெல்லை மாவட்ட நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாம் தமிழர் கட்சியில் 8 வருடங்களாக பயணித்து வந்தேன். நாங்குநேரி தொகுதியில் 4 வருடங்களாக தொகுதி செயலாளராக இருந்தேன்.

அரசியல் பயணம் என்பதே வெற்றியை நோக்கித் தான் செல்ல வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்பு நாம் தமிழர் கட்சியில் இல்லை.

வாட்ஸப், ஃபேஸ்புக்கில் இருக்கும் பலத்தை விட கிரவுண்ட் லெவலில் கட்டமைப்பே இல்லை. சீமான் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. நாம் தமிழர் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கமே அவருக்கு இல்லை.

கட்சியை அவர் சரியாக வழிநடத்தவில்லை. அவரது பேச்சால் இளைஞர்களை மூளைச் சலைவை செய்து, கோஷம் போடுவதற்கு தான் கட்சியில் வைத்துள்ளார். தமிழ் சமுதாயத்தின் முக்கியமான நபரான பெரியாரை குறைசொல்லி ஆதாயம் தேட நினைக்கிறார். கட்சியில் நோட்டீஸ் ஒட்டி களத்தில் வேலை செய்தாலும் எங்களுக்கான மதிப்பு கட்சியில் இல்லை” என்கிறார்.

கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கலியபெருமாள் கூறும்போது, “நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்தே நான் உறுப்பினராக இருந்தேன். 12 வருடங்களாக மாவட்ட செயலாளராகவும் கடந்த மூன்று வருடங்களாக மயிலாடுதுறை நாம் தமிழர் நாடாளுமன்ற பொறுப்பாளராகவும் இருந்துள்ளேன்.

2016 சட்டமன்ற தேர்தலில் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். கட்சியை வளர்ப்பதற்காக கடுமையாக பணியாற்றியுள்ளேன்.

இதனால் அதிக பொருள் இழப்புகளையும் நேர இழப்புகளையும் சந்தித்துள்ளேன். இது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். கடந்த மாதம் திமுகவில் இணைந்தேன். இன்றைக்கு என்னுடைய ஒருங்கிணைப்பில் 150 பேர் நாம் தமிழர் கட்சியில் இணைகின்றனர். தனிப்பட்ட நபருக்கான கட்சியாக நாம் தமிழர் மாறிவிட்டது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share