ஆம்ஸ்ட்ராங் கொலை… பாஜக துணைத் தலைவர் பால் கனகராஜிடம் 7 மணி நேர விசாரணை! நடந்தது என்ன?

அரசியல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில். தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவரும் வழக்கறிஞருமான பால் கனகராஜிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

அதிமுக, பாஜக, தமாகா, திமுக, காங்கிரஸ் என்று பல்வேறு கட்சிகளின் வடசென்னைப் புள்ளிகள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில்… பால் கனகராஜுக்கு சம்மன் அளித்ததும், அவரிடம் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தியதும் பாஜகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது,

பால் கனகராஜ் பாஜகவில் இணைவதற்கு முன்பே பிரபலமான வழக்கறிஞர். தமிழ் மாநில கட்சி என்ற கட்சியை நடத்தி வந்தவர். பார் கவுன்சில் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தொடர்பான பிரச்சினைகளில் பரபரப்பாக இவரது பெயர் அடிபட்டிருக்கிறது. மேலும் பல ரவுடிகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடியவர். இப்போது பாஜகவில் மாநில துணைத் தலைவராக இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆகஸ்டு 9 ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் போலீஸ் குடியிருப்பில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விசாரணைக்கு ஆஜரானார் பால் கனகராஜ். அவரிடம் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது,

கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது,

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைப் பொறுத்தவரை தமிழக போலீஸின் செயல்பாடுகளை பாஜக சார்பில் பாராட்டுகிறோம். இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட டீப் ஆக சென்று விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை முனைப்பு காட்டுகிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி யாராக இருந்தாலும் கூட விசாரிக்கிறார்கள்.

யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும். நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் போலீஸின் நடவடிக்கை நீட்டா ஹானஸ்டா எடுத்திருக்கும் நடவடிக்கை நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இன்னும் ஆழமாக விசாரிக்கட்டும்” என்று பாராட்டியிருந்தார்.

அவர் அப்படிச் சொன்ன இரண்டே நாட்களில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக விசாரிக்கப்பட்டிருக்கிறார் பாஜகவின் மாநில துணைத் தலைவரான பால் கனகராஜ்.

பல வழக்குகளில் தனது களையன்ட்டுகள் போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது வழக்கறிஞராக அதை எதிர்கொண்ட பால் கனகராஜ் இன்று அவரே போலீஸ் விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார்.

Junior Vikatan - 16 September 2020 - “ரௌடிகள் சமூக சேவை செய்யவா கட்சிக்கு வருகிறார்கள்?” | BJP advocate Paul Kanagaraj interview - Vikatan

விசாரணையில் என்ன நடந்தது?

“சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும், காங்கிரஸ் பிரமுகரும், பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனுமான அஸ்வத்தாமனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அஸ்வத்தாமன் யார் யாரோடு கடந்த பல மாதங்களாக போனில் பேசியுள்ளார் என்ற பட்டியலை எடுத்திருக்கிறார்கள் போலீஸார். அதில் பல முறை அவர் பால் கனகராஜோடு பேசிய தகவல் கிடைத்தது.

பால் கனகராஜோடு எதற்காக இத்தனை முறை பேசினீர்கள் என்று அஸ்வத்தாமனிடமும் போலீஸார் விசாரித்தனர். அந்த அடிப்படையில்தான் பால் கனகராஜ் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

இப்போது சிறையில் இருக்கும் நாகேந்திரன், அஸ்வத்தாமன், தலைமைறைவாக இருக்கும் சம்பவ செந்தில் ஆகியோர் உங்களுக்கு எப்படி பழக்கம் என்று கேட்டிருக்கிறார்கள் போலீஸார்.

அதற்கு பால் கனகராஜ், ‘நான் ஒரு வழக்கறிஞர். 33 வருடமாக வழக்கறிஞராக இருக்கிறேன். எனக்கு பல க்ளையன்ட்டுகள் இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் என்னுடைய க்ளையண்ட்…. அவங்க என்னோட பேசினது உண்மை. கேஸ் விஷயமா பேசியிருக்கேன். பீஸ் விஷயமா பேசியிருக்கேன். அது என்னுடைய தொழில் தர்மம்… ’ என்று பதிலளித்திருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங்குடன் உங்களது பழக்க வழக்கம் எப்படி? என போலீசார் கேட்க, ‘எனக்கு நல்ல நண்பர். அவருடைய மரணம் எனக்கு பெரும் துன்பத்தைக் கொடுத்தது’ என்று சொல்லியிருக்கிறார் பால் கனகராஜ்.

’அவர் உங்கள் நண்பர் என்கிறீர்கள். ஆனால் பார் அசோசியேஷன் தேர்தலில் நீங்கள் தோற்றுப் போனதற்கு காரணமே ஆம்ஸ்ட்ராங்க்தானே… மேலும் உயர் நீதிமன்றத்தில் நடந்த பெரும் மோதலில் நீங்களும் ஆம்ஸ்ட்ராங்கும் எதிரெதிர் முகாம்களில் இருந்தீர்கள்தானே… பிறகு எப்படி அவர் உங்களுக்கு நண்பராக இருக்க முடியும்?’ என்று கேட்டனர் போலீஸார்.’

அதற்கு பால் கனகராஜ், ‘பார் அசோசியேஷன் தேர்தலில் நடந்தது போட்டி. அது அந்த தேர்தலோடு முடிந்துவிட்டது. தேர்தல் முடிந்ததும் அந்த பிரச்சினையும் முடிந்துவிட்டது. அதையெல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்வதில்லை.

உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் மோதலைப் பொறுத்தவரைக்கும் அந்தந்த நேரத்தில் நடந்த சம்பவங்கள். அந்தந்த சமயத்துக்கு ஏற்ற மாதிரி சில நிலைப்பாடுகள் இருக்கும். அவற்றின் அடிப்படையில் மனதில் பகையை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு நான் பக்குவமற்றவன் கிடையாது. இதையெல்லாம் தாண்டிதான் ஆம்ஸ்ட்ராங் எனது நண்பர் என்று சொல்கிறேன். எனக்கு அவரோடு எந்த முரண்பாடும் கிடையாது’ என்று இயல்பாக பதிலளித்திருக்கிறார் பால் கனகராஜ்” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

விசாரணை முடித்து வெளியே வந்த பால் கனகராஜ் செய்தியாளர்களிடம், ‘எல்லா கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். போலீஸார் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன். முழு ஒத்துழைப்பு அளித்தேன். ஆம்ஸ்ட்ராங் கொலையில் என் மூலமாக ஏதும் துப்பு கிடைக்குமா என்று போலீசார் என்னிடம் கேள்விகள் கேட்டார்கள். எனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் அவர்களிடம் தெரிவித்தேன் ” என்று கூறியிருக்கிறார்.

விசாரணை சென்ற போக்கை வைத்துப் பார்க்கும்போது பால் கனகராஜ் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு குறைவாகவே இருக்கின்றன என்றும் போலீசுக்குள் இருந்தே தகவல்கள் கிடைக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வணங்காமுடி

‘கனா காணும் காலங்கள்’ சீசன் 3 : விரைவில் ஓடிடி வெளியீடு!

“கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம்” : நீதிபதி கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *