பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மகனும் இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச்செயலாளருமான அஸ்வத்தாமன் இன்று (ஆகஸ்ட் 7) கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் தம்பி புன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார்கள்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுகவில் இருந்த மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த ஹரிகரன், திருவள்ளூவர் மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ், பாஜவை சேர்ந்த அஞ்சலை உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய புழல் சிறையில் இருந்தபடியே ரவுடி நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாவும், இந்த கொலை வழக்கில் நாகேந்திரனின் மகன் போலீஸ் விசாரணைக்குள் வருவார். அதனால் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சிக்குள்ளும் சலசலப்புகள் ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் சொல்வதாக ஆம்ஸ்ட்ராங் கொலை… சிக்கப்போகும் அரசியல் புள்ளி என்ற தலைப்பில் ஜூலை 26-ஆம் தேதி மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களாக அஸ்வத்தாமனிடம் விசாரணை நடத்தி வந்த போலீசார் இன்று அவரை கைது செய்தனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி மீதான ED வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Olympics 2024: ஆடவர் ஹாக்கி… அதிர்ச்சி தோல்வியடைந்த இந்தியா… வெண்கலம் கிடைக்குமா?