ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரன் இன்று (ஆகஸ்ட் 9) கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பகுஜன் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக செம்பியம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுவரை ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், அதிமுகவைச் சேர்ந்த மலர்க்கொடி, பாஜகவைச் சேர்ந்த அஞ்சலை உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான சம்போ செந்தில் இன்னும் பிடிபடவில்லை.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னையை கலக்கிய பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறையில் இருந்தவாறே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக நாகேந்திரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து நாகேந்திரனை கைது செய்வதற்கான ஆணை வேலூர் மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மகன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நாகேந்திரனும் கைது செய்யப்பட்டிருப்பது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா