பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரம், சென்னை மாநகர காவல் ஆணையரையே மாற்றியிருக்கிறது.
மாநகர காவல் ஆணையர் மட்டுமல்ல… சென்னை காவல்துறையின் முக்கிய பொறுப்புகளில் இருந்த போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
சென்னை மாநகர புதிய காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் அருண் ஐ.பி.எஸ்., அதன் பின் முதன் முதலாக செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் ஆக்ஷன் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றி போலீஸார் ஒரு பக்கம் விசாரணை நடத்திக் கொண்டிருக்க… ‘ஆம் அண்ணா’ கொலை பற்றி… ஆமாம், ஆம்ஸ்ட்ராங்கை அவரை அறிந்தவர்கள், பகுஜன் சமாஜ் நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாரும் ’ஆம் அண்ணா’ என்றுதான் அழைக்கிறார்கள். அவர்கள் தனியாக… ஆம் அண்ணாவை கொலை செய்தது யார், எப்படி என்று தனியாக ஒரு விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது போலீஸுக்கு மேலும் பதற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
இந்த சூழலில்தான், ‘ஆம்ஸ்ட்ராங் கொலை நடப்பது போலீசில் இருக்கும் சில உயரதிகாரிகளுக்கு முன்பே தெரியும். ஆனாலும் அவர்கள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை’ என்ற பகீர் தகவல் இந்த இரு வட்டாரங்களில் இருந்தும் நமக்கு கிடைத்திருக்கிறது.
வடசென்னை அரசியல், காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.
“ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் பல மோட்டிவ்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், அந்த மோட்டிவ்களை ஒருங்கிணைத்து செயல்வடிவத்துக்குக் கொண்டுவந்தது ஆருத்ரா கோல்டு கம்பெனி மோட்டிவ்தான்.
ஆருத்ரா கோல்டு கம்பெனி சென்னை, ஆரணி, காஞ்சிபுரம், செய்யாறு, செங்கல்பட்டு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிளைகளைத் தொடங்கியது. இதன் அலுவலகத்தைத் தொடங்கி வைத்ததே அப்போதைய போலீஸ் ஐ.ஜி. ஒருவர்தான்.
ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி என 12 மாதங்களுக்கு வழங்கப்படும். அதோடு தங்கக் காசுகளும் பரிசாகக் கிடைக்கும். இதுதான் ஆருத்ராவின் தாரக தந்திர மந்திரம். இதை நம்பி பல மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ், அரசு ஊழியர்கள், பிசினஸ் புள்ளிகள் தங்களிடம் இருக்கும் பணத்தை எல்லாம் முதலீடு செய்தார்கள். ஆனால் குறித்த காலத்தில் அவர்களுக்கு தருவதாக சொன்ன வட்டிப் பணமோ, அசல் பணமோ, தங்கமோ எதுவும் கொடுக்கவில்லை.
இதையடுத்து பலர் போலீசில் புகார் கொடுத்தனர். பொருளாதார குற்றப் பிரிவு இதை விசாரிக்கத் தொடங்கியது. பணம் கேட்டு ஆருத்ரா அலுவலகத்தை தினந்தோறும் பலர் முற்றுகையிட்டனர். இதனால் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகர்… இப்படி தினம் தினம் வருபவர்களை ட்ரீட் செய்வதற்காக போலீசின் உதவியை நாடினார்.
’ஏமாந்து புகார் கொடுக்க வர்றங்களை போலீஸே மிரட்டினா நல்லா இருக்காது. ஆற்காடு சுரேஷுனு ஒரு ரவுடி இருக்காப்ல. அவர்கிட்ட கேளுங்க. அவரே எல்லா ஏற்பாடும் பண்ணுவாரு’ என்று போலீஸ் யோசனையின் பேரில்… ஆருத்ராவால் ‘தற்காப்புக்கு’ ஏற்பாடு செய்யப்பட்டவர்தான் ஆற்காடு சுரேஷ். பெயர்தான் ஆற்காடு சுரேஷ். அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் வடசென்னை புளியந்தோப்புதான்.
ஆருத்ரா கோல்டு கம்பெனியில் ஏமாந்த பலரும் கூட்டம் கூட்டமாக அலுவலகம் வரும்போது அவர்களை ஆற்காடு சுரேஷின் கும்பல் மிரட்டத் தொடங்கியது. ஏமாந்தவர்களை ஒருங்கிணைப்பவர்களை எல்லாம் தேடிச் சென்று மிரட்டியது. இதில் பலர் பணம் போனால் போகுது, உயிர் தப்பிச்சா போதும் என்று அமைதியாகிவிட்டனர்.
இந்நிலையில்தான் ஆருத்ராவில் பணத்தை அதிக அளவில் ஏமாந்தவர்களில் சிலர் ஆம்ஸ்ட்ராங்கை தேடி வந்தனர். ஆருத்ரா மோசடியை சொல்லியும் அதைக் கேட்கப் போனால், ஆற்காடு சுரேஷின் கும்பல் தங்களை மிரட்டுவதையும் சொல்லி ஆம்ஸ்ட்ராங்கிடம் முறையிட்டுள்ளனர்.
அதன் பிறகுதான் அரக்கோணம் ஜெயபால் மூலம் ஆற்காடு சுரேஷை எச்சரித்த ஆம்ஸ்ட்ராங்… இது தொடர்பாக ஆற்காடு சுரேஷையே ஒரு முறை சந்தித்திருக்கிறார்.
இருவருக்கும் நேருக்கு நேராக வாக்குவாதம் முற்றியிருக்கிறது.
‘ரியல் எஸ்டேட் பார்ட்டிகிட்ட புடுங்குறே.., பெரிய பெரிய சேட்டுகிட்ட புடுங்குறே… நான் கேட்டேனா? ஏன் அப்பாவி சனங்ககிட்ட புடுங்குறவனுக்கு சப்போர்ட் பண்றே? இது நல்லா இருக்காது’ என்று சுரேஷை எச்சரித்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.
அதற்கு ஆற்காடு சுரேஷ், ‘ஏமாந்தவங்களோட பணத்தை மீட்டு என்ன அவங்களுக்கேவா கொடுக்கப் போறே? உங்க பஞ்சாயத்து பத்தியெல்லாம் தெரியாதா?’ என்று ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி கடுமையாக பேசியிருக்கிறார்.
இருவருக்கும் இடையே காரசார வார்த்தைப் போர் முற்றி, ‘முடிஞ்சதப் பாத்துக்க’ என்று ஆக்ரோஷமாக கத்திவிட்டு கிளம்பிவிட்டார் ஆற்காடு சுரேஷ்.
ஆம்ஸ்ட்ராங், ஆற்காடு சுரேஷ் இருவருமே அவரவர் அளவில் போலீஸ்காரர்களோடு தொடர்பில் இருப்பவர்கள். சென்னை அதன் சுற்றுப் புற மாவட்டங்களில் பல போலீஸ் ஸ்டேஷன்களில் ஆம்ஸ்ட்ராங்குக்கும் ஆட்கள் இருப்பார்கள்… ஆற்காடு சுரேஷுக்கும் ஆட்கள் இருப்பார்கள். ஏ.சி. அளவு அதிகாரிகள் கூட இருவருக்கும் சோர்ஸ்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் ஆருத்ரா விவகாரத்தில் தன்னை மிரட்டியதை தனக்கு நெருக்கமான சில உயர் போலீஸ் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றிருக்கிறார் ஆற்காடு சுரேஷ். அவர்களும் சுரேஷுக்கு சில அறிவுரைகளை சொல்லியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் 2023 ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டார். இதையடுத்து ஆற்காடு சுரேஷ் கும்பலில் இருக்கும் முக்கியமானவர்கள் தங்களுக்கு நெருக்கமான போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்துள்ளனர்.
‘ஆருத்ரா பணம் மட்டுமில்ல… அண்ணன் சம்பாரிச்ச எல்லா பணத்திலயும் உங்களுக்கும்தானே கொடுத்தாரு? நீங்க சொன்னதைதானே அவரு செஞ்சாரு… இப்ப பாருங்க அண்ணனையே போட்டுட்டாங்க. அண்ணனை நீங்க ஏன் காப்பாத்தலை? எங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியும். நீங்க எங்களை தடுக்காம சில உதவிகளை செஞ்சா போதும்’ என்று அந்த உயரதிகாரிகளிடம் ‘உரிமையோடு’ சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அப்போது முதலே ஆற்காடு சுரேஷ் கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கண்காணிக்கத் தொடங்கிவிட்டது. அதற்கான தொடர் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதும் ஆற்காடு சுரேஷ் கும்பலுக்கு நெருக்கமான போலீஸ் உயரதிகாரிகளுக்கு அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. ஆற்காடு சுரேஷ் கேட்டுக் கொண்டது போலவே போலீஸ் தரப்பில் ‘கண்டும் காணாமல் இருத்தல்’ உள்ளிட்ட சில உதவிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
அந்த உயரதிகாரிகளுக்கு ‘முன்கூட்டியே தெரிந்து’ இன்னும் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது? நடக்கப் போகிறது? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது! ஆனால் போலீஸை போலீஸ் சிக்க வைக்குமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
ஜூலை 5 ஆம் தேதி மாலை ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், அந்த கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே நள்ளிரவில் அண்ணா நகர் காவல்நிலையத்தில் எட்டு பேர் சரணடைந்தனர். அவர்கள் சரண் அடைந்த விதமும், இடமும் கூட பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது” என்கிறார்கள் வடசென்னை வட்டாரங்களில்.
கறுப்பாடுகளை களையெடுத்தால்தான் காவல்துறை சுத்தமாக இருக்கும். இல்லையென்றால், இதே நிலைமைதான் தொடரும் என்கிறார்கள் போலீசிலேயே இருக்கும் சில நேர்மையானவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
விக்கிரவாண்டி : வாக்குச்சாவடியில் நின்ற பெண்ணுக்கு கத்திக்குத்து!
விக்கிரவாண்டி தேர்தல்: 1 மணி நிலவரம்… 50.95% வாக்குப்பதிவு!