ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது ஆதரவாளர் ஒருவர், “அண்ணன் வீட்டுக்கு வந்தாரு… எங்ககிட்ட பேசிட்டு இருந்தாரு… அப்போ, தாடி வைத்துக்கொண்டு வந்தவன் மீது சந்தேகம் வந்து தள்ளிவிட்டேன்… அவன் குறிவைத்து வெட்டினான்… 10 பேர்கிட்ட வந்தாங்க… முதலில் கைவிரல் முதுகில் வெட்டு விழுந்தது.. பாலாஜி அண்ணா வாணான்னு கத்தறதுகுள்ள வெட்டி சாய்த்துவிட்டு போய்ட்டானுங்க… அண்ணன் கீழே விழுந்து கிடந்தத பார்த்தேன்” என கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
இந்த கொலை சம்பவத்தில் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
“ஆம்ஸ்ட்ராங் படுகொலை உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதையே காட்டுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கு காவல்துறையை தம்மிடம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஆம்ஸ்ட்ராங் படுகொலை… சென்னை வரும் மாயாவதி
சட்டென உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை!