ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் மொட்டை கிருஷ்ணனுடன் பணப்பரிவர்த்தனை செய்ததாக வெளியான தகவலுக்கு நெல்சன் மனைவி மோனிஷா மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வருபவர்களான சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரிடம் போனில் பேசியதாக மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்பும் மொட்டை கிருஷ்ணன் மற்றும் சம்பவ செந்திலுடன் பேசி வந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்தநிலையில் மோனிஷாவின் வங்கிக் கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும், அது மொட்டை கிருஷ்ணனுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு மோனிஷா இன்று (ஆகஸ்ட் 21) தனது வழக்கறிஞர் மூலம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
“ஆன்லைன் தளங்கள், செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் சினிமா தளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 07, 2024 அன்று, வழக்கறிஞர் கிருஷ்ணன் தொடர்பாக விளக்கம் கேட்டு மோனிஷா நெல்சனை போலீஸார் அழைத்தனர்.
அதன்படி விசாரணைக்கு மோனிஷா முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.
கிருஷ்ணனுடன் மோனிஷா பணப் பரிவர்த்தனைகள் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது.
மோனிஷாவுக்கும் அவரது கணவரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படுகிறது. இது தொடரும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
செங்கல்பட்டு பாலாறு பகுதியில் பழமையான கற்கோடரி… அகழாய்வு செய்ய கோரிக்கை!
‘கொட்டுக்காளி’… படம் பார்க்கத் தூண்டும் கமல் விமர்சனம்!