பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பாஜகவின் மாநில துணைத் தலைவரான வழக்கறிஞர் பால் கனகராஜ் காவல்துறை விசாரணைக்காக இன்று (ஆகஸ்ட் 9) நேரில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 23 நபர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. paul kanagaraj
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு சதீஷ்குமர் என்ற பெயரில் ஒரு மிரட்டல் கடிதமும் வந்தது. அந்தக் கடிதத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள தனது நண்பரை விடுதலை செய்யாவிட்டால் பொற்கொடியைக் குண்டு வீசி கொன்றுவிடுவேன் என்றும் மற்றும் அவரது 4 வயது மகளைக் கடத்திக் கொன்றுவிடுவேன் என்றும் அவர் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பொற்கொடிக்கும் அவரது குடும்பத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும், படூரைச் சேர்ந்த சதீஷ்குமாரை காவல்துறை விசாரித்துவந்தது. இந்த மிரட்டல் கடிதம் சம்பந்தமாக இன்று காலை தனியார்ப் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரைச் செம்பியம் காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதானவர்கள் சார்பாக ஏற்கனவே வேறு வழக்குகளில் வாதாடிய பால் கனகராஜை நேரில் ஆஜராகச் சொல்லி காவல்துறை அவருக்குச் சம்மன் அனுப்பியது. paul kanagaraj
இதனையடுத்து இன்று காலை புதுப்பேட்டை காவல் குடியிருப்பில் உள்ள விசாரணை அலுவலகத்தில் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜரானார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் ஆஜராவதற்கு முன் இதுகுறித்து நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு பால் கனராஜ் அளித்த பேட்டியில், “இந்த வழக்கில் தொடர்புடைய நாகேந்திரன் மற்றும் சம்பவம் செந்தில் ஆகியோருக்கு ஏற்கனவே சில வழக்குகளில் நான் வழக்கறிஞராக ஆஜராகியுள்ளேன்.
பார் கவுன்சில் தேர்தல் சம்பந்தமாக தற்போதைய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆனந்தன் என் மீது குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படலாம். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நான் விசாரணைக்கு ஆஜரானேன். தற்போது இரண்டாவது முறையாக விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் எனக்கு நல்ல நண்பர். அவருடன் எனக்கு எந்த பகையும் கிடையாது. அவருடைய அனைத்து இல்ல விழாக்களிலும் நான் பங்கேற்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மதுபான ஊழல் வழக்கு: மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… ஒரேடியாக உயர்ந்த தங்கம் விலை!