பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி கொல்லப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து கைதுகள், கஸ்டடி விசாரணைகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணையின் முக்கிய அம்சமாக வேலூர் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் ஆகியோர் ஒரே நேரத்தில் போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்கள்.
கடந்த 7 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, ஆகஸ்டு 13 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள் போலீஸார். அப்போது 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார் நீதிபதி.
இதேபோல அஸ்வத்தாமனின் தந்தையான பிரபல ரவுடி நாகேந்திரன் வேலூர் சிறையில் இருந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அவரை கைது செய்தனர் போலீஸார். அவர் ஆகஸ்டு 14 ஆம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு 3 நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்கியது நீதிமன்றம்.
இவ்வாறு தந்தை நாகேந்திரன், மகன் அஸ்வத்தாமன் இருவருமே போலீஸ் கஸ்டடியில் இருக்கும் நிலையில்… இவர்களிடம் விசாரணை எப்படி நடக்கிறது? தந்தையும் மகனும் ஒரே இடத்தில் விசாரிக்கப்படுகிறார்களா அல்லது தனித்தனி இடங்களில் வைக்கப்பட்டுள்ளார்களா? விசாரணை விவரம் என்ன என்பது பற்றி விசாரித்தோம்.
பொதுவாக குற்ற வழக்குகளில் போலீஸ் கஸ்டடி எடுக்கப்பட்டவர்களில் முதலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குத்தான் அழைத்துச் செல்லப்படுவார்கள். அதேபோலத்தான் அஸ்வத்தாமன், நாகேந்திரன் இருவரும் தனித்தனியாக செம்பியம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
பெயர், ஊர், முகவரி, அங்க அடையாளம், ஏற்கனவே வழக்குகள் உள்ளவர்கள் என்றால் அந்த வழக்கு விவரங்கள் எல்லாம் காவல்நிலையத்தில் சரிபார்க்கப்படும். அதன் பின் காவல்நிலையத்திலோ அல்லது வேறு உயர் காவல் அதிகாரிகளின் அலுவலகத்திலோ வைத்துதான் கஸ்டடி விசாரணை நடைபெறும். இதுதான் போலீஸ் நடைமுறை.
அந்த வகையில் செம்பியம் காவல் நிலையம், இணை ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆகஸ்டு 13 முதல் அஸ்வத்தாமனிடமும், ஆகஸ்டு 14 முதல் நாகேந்திரனிடமும் போலீஸ் விசாரணை தொடங்கியது.
கூடுதல் ஆணையர் நரேந்தர் நாயர், இணை ஆணையர் பர்வேஷ்குமார், துணை ஆணையர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட ஐந்து சிறப்பு டீம்கள் மகன் – தந்தை இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகேந்திரனை தனியாகவும் அஸ்வத்தாமனை தனியாகவும் விசாரிக்கிறார்கள். அஸ்வத்தாமனிடம் நடந்த கஸ்டடி விசாரணை பற்றி அதிகாரிகள் வட்டாரங்களில் துருவினோம்.
“புன்னை பாலு, மச்சான் அருள், ஹரிஹரன் வக்கீல் கிட்ட எல்லாம் அடிக்கடி பேசியிருக்கீங்களே… என்ன விசயமா பேசினீங்க?”
“நான் பொதுவாழ்க்கையில இருக்கேன். கட்சியில இருக்கேன். வழக்கறிஞரா இருக்கேன். அந்த அடிப்படையில பேசியிருக்கலாம்.”
“அவங்ககிட்ட எதைப் பத்தி பேசீனிங்கனு ஞாபகம் இருக்கா?”
“‘இல்ல… இப்ப அதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்ல…”
“பகுஜன் சமாஜ் கட்சியோட மாநில தலைவரா இருந்த ஆம்ஸ்ட்ராங்கை உங்களுக்கு தெரியுமா?”
“ம்ம்.. தெரியும். நானும் ஒரு வழக்கறிஞர். அவரும் ஒரு வழக்கறிஞர்…”
“அந்த அளவுலதான் பழக்கமா? …அதுக்கு மேலயும் பழக்கமா?”
“வக்கீல்ன்ற முறையிலதான் பழக்கம்…”
“அவருக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்சினைகள் இருக்கா?”
“இல்லையே அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்ல…”
“அவரோட குழ்ந்தை பிறந்தநாள் விழாவுக்கு நீங்க போனிங்க இல்ல…?”
“ஆமா போயிருந்தேன்…”
“அவரோட குழந்தை பிறந்தநாளுக்கு போன நீங்க, போன ஜூலை 5 ஆம் தேதி அவர் கொடூரமா கொல்லப்பட்ட பிறகு அந்த துக்கத்துக்கு ஏன் போகலை?’”
“இந்த கேள்விக்கு சில நிமிடங்கள் அஸ்வத்தாமன் அப்படியே மௌனம் காக்கிறார்.”
“சொல்லுங்க…. உங்களுக்கும் அவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லைனா அவர் சாவுக்கு நீங்க ஏன் போகலை?”
“அது… என இழுத்திருக்கிறார் அஸ்வத்தாமன்.”
தொடர்ந்து கேள்விக் கணைகளைத் தொடுத்தது போலீஸ்…
“நீங்க ஏன் போன மாசம் மும்பை போனீங்க?”
“என் ஃப்ரண்ட்ஸ்சை பாக்க போனேன்…”
“அப்படியா… சரி…. திருவள்ளூர் மாவட்ட பகுஜசன் சமாஜ் தலைவர் பிரேமோடு உங்களுக்கு என்ன பிரச்சினை? அவர் மனைவி உஷா பிரேம் ஊராட்சித் தலைவரா இருக்காங்களே… அவங்களோட உங்களுக்கு என்ன பிரச்சினை?”
என கிடுக்கிப் பிடி கேள்வியை போலீஸ் கேட்டதும் மீண்டும் திணற ஆரம்பித்தார் அஸ்வத்தாமன்.
“ஒரு கம்பெனி ஸ்க்ரேப் விஷயமா எங்க ரெண்டு பேருக்கும் இடையில பிரச்சினையாச்சி… ஆனா, அதை ஆம்ஸ்ட்ராங் தலையிட்டு பேசிட்டாரு. நாங்க சமரசம் ஆயிட்டோம்….’ என பதிலளித்தார் அஸ்வத்தாமன்”
கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு மீண்டும் போலீஸார் கேள்விகளை தொடுத்தார்கள்.
“ஆம்ஸ்ட்ராங்குக்கும் பால் கனகராஜுக்கும் என்ன பிரச்சினை?’”
“முன்னாடி ஹை கோர்ட்ல நடந்த மோதல், பார் கவுன்சில்னு பிரச்சினை இருந்தது. ஆனா அதுக்கப்புறம் என்ன ஆச்சுனு எனக்கு தெரியாது…”
“உங்க அப்பா நாகேந்திரனை நீங்க கடைசியா எப்ப பாத்தீங்க?’ எப்ப பேசினீங்க? என்ற கேள்விக்கு அஸ்வத்தாமன் சில பதில்களைச் சொல்ல…”
ஒரு ஆஸ்பத்திரி பெயரை சொல்லி அங்கே சிகிச்சை பெற வந்த உங்க அப்பாவை உங்களோட வேற யாரு யாரெல்லாம் பாத்தாங்க? என்று அடுத்த கேள்வியைக் கேட்டனர் போலீஸ் உயரதிகாரிகள்.
“எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது… என்று பதில் சொல்லியிருக்கிறார் அஸ்வத்தாமன்.”
“உங்க அப்பா உங்களுக்கு ஏதும் அசைன்மென்ட் கொடுத்தாரா?” என்று போலீஸ் அதிகாரி கேட்க…
“எனக்கு உடம்பு சரியில்லை… பிரஷர் மாத்திரை சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். ஆஸ்பத்திரி போகணும்” என்று சொல்லியிருக்கிறார் அஸ்வத்தாமன்.
அதன்பின் கொஞ்சம் இடைவெளிவிட்டிருக்கிறார்கள் போலீஸ் உயரதிகாரிகள்.
இதேபோல அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரனிடமும் கஸ்டடி விசாரணை நடந்திருக்கிறது.
நாகேந்திரனிடம், “உங்க பையன் அஸ்வத்தாமனும் கஸ்டியில இருக்காரு தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார்கள் போலீஸார்.
“நான் கேள்விப்பட்டேன் சார்” என்று பதில் சொல்லியிருக்கிறார் அவர்.
தந்தை-மகன் இருவரிடமும் நடத்திய விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதா, ஒன்றாக உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
–நமது நிருபர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆளுநர் தேநீர் விருந்து : சபாநாயகர், அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!
தனியார் பேருந்து ஓட்டுநரை கண்டித்த சேரன் மீது புகார்!
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : 14 முக்கிய அம்சங்கள்!