ஆம்ஸ்ட்ராங் கொலை… சிக்கப் போகும் அரசியல் புள்ளி!

Published On:

| By Aara

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் விசாரணையும், கைதும் நீண்டுகொண்டே போகிறது.

கடந்த ஜூலை 5 ஆம் தேதி மாலை மங்கிய நிலையில், ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் அவரது வீடு கட்டுமான பகுதியில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

அப்போது கூடுதல் ஆணையராக இருந்த அஸ்ரா கர்க் குற்றவாளிகள் வெளியில் தப்பித்து போகாத அளவுக்கு தனிப்படைகளை முடுக்கிவிட்டார்.

இந்த நிலையில்… கொலை குற்றவாளிகளின் ஆதரவு வழக்கறிஞர் ஒருவர் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏசி லெவலில் உள்ள சிலரிடம் பேசி அவர்கள் சொன்ன இடத்தில் எட்டுபேரை சரண்டர்படுத்தினார். இதுபற்றி ஏற்கனவே மின்னம்பலம் இதழில், ‘கொலை நடந்த சில மணி நேரங்களில் அவர்கள் சரண்டர் ஆன விதமும் இடமும் சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த தகவல்கள் கூடுதல் ஆணையருக்கு கிடைத்ததும் உண்மையான குற்றவாளிகளா என அறிந்துகொள்ள நேரடியாக ஸ்பாட்டுக்கு வந்து அவரது பாணியில் விசாரித்தவர்… தொழில்நுட்ப ரீதியாகவும் அடுத்தடுத்த கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினார். மலர்க்கொடி, அஞ்சலை, ஹரிதரன், சிவா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இன்று (ஜூலை 26) பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் அஸ்ரா கர்க் வடக்கு மண்டல ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார் அவருக்கு பதிலாக நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டார்.

கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் மற்றும் ஜேசி, டிசி, ஏசி போன்ற விசாரணை அதிகாரிகளிடம் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அருண் அவ்வப்போது விசாரணை ரிப்போர்ட் கேட்டு வருகிறார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவா அதற்கு முன்பு கைதான ஹரிஹரன் போன்ற வழக்கறிஞர்கள்  ‘சம்பவ’ செந்தில் என்பவரை கை நீட்டியிருக்கிறார்கள். சம்பவ செந்திலை ஒருபக்கம் போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. சம்பவ செந்திலின் போட்டோ என்று இப்போது ஊடகங்களில் உலா வந்துகொண்டிருப்பது எட்டு வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ. இப்போது என்ன கெட்டப்பில் இருக்கிறாரோ என்று தேடிக் கொண்டிருக்கிறது போலீஸ்.

இன்னொரு பக்கம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முன் பகை ஓரளவுக்கு என்றால்… ரியல் எஸ்டேட், ஸ்கிராப், ஆருத்ரா கோல்டு நிறுவனம் போன்றவற்றின் அடிப்படையிலான தொழில் பகையும் அதே அளவுக்கு இருக்கிறது என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில்.

“சில மாதங்களுக்கு முன்பு பெரம்பூர் பகுதியில் பெரிய பரப்பிலான இடப் பரிவர்த்தனையில் 25 கோடிக்கு மேல் கைமாறியுள்ளது. இதில் தனக்கு கணிசமான பங்கு கிடைக்காத அதிகாரம் படைத்த அரசியல் பிரமுகர் அதிருப்தியில் இருந்திருக்கிறார். ஆனால், அந்த பிரமுகர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பண உதவி செய்தாரா என தெரியவில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஒரு முக்கிய குற்றவாளி.

ஆற்காடு சுரேஷ் தம்பி புன்னை பாலு கொடுத்த வாக்குமூலத்தில் வேறு சில முக்கியமான தகவல்களும் போலீசுக்கு கிடைத்துள்ளன. அந்த தகவலை வைத்துக் கொண்டு போனால் அரசியல் ரீதியாக அதிர்ச்சி தரும் வகையில் இருக்கின்றன.

புன்னை பாலு கொடுத்த வாக்குமூலத்தில், ‘ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி எதிர்ப்புதான் இருக்கிறது. அந்த அளவுக்கு பகையை சம்பாதித்துள்ளார்.  புழல் சிறையிலிருந்து  சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட ஒரு சிறைக்கைதியின் மகன் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட முயற்சித்திருக்கிறார். ஆனால், அவர் போட்டியிடாத அளவுக்கு சட்ட ரீதியான செக் வைத்தார் ஆம்ஸ்ட்ராங்.

அப்போதே கோபப்பட்ட அந்த கைதி, சிறையில் இருக்கும் இன்னொரு ரவுடியிடம், ’நான்லாம் பத்து ரூபாய்க்கே கொலை செஞ்சவன். என் மகன் முன்னேற்றத்திற்கே தடை போட்ருக்கான். நான் அவனைப் பார்த்துக்கிறேன்’ என கோபமாக பேசியுள்ளார்.

அவர்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சிறையில் இருந்தபடியே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா இல்லையா எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே என்னோட அண்ணன், எங்கள் ஆளுங்க கொலைக்கு ஆம்ஸ்ட்ராங் தரப்புதான் காரணம். அதனால நாங்களும் அந்த ஸ்கெட்சுல சேர்ந்துக்கிட்டோம்’ என்று புன்னை பாலு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

மேலும், போலீசாரின் விசாரணையில் தொழில்நுட்ப ரீதியாக கால்தம் மற்றும் கால் டீட்டெயில்ஸ் ( சிடிஆர்) எடுத்து விசாரித்ததில், வேலூர் சிறையில் இருக்கும் அந்த கைதி மகனின் செல்போனுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியிருக்கும் வழக்கறிஞர் ஹரிஹரன் மற்றும் தலைமறைவாக இருக்கும் சம்பவ செந்தில் ஆகியோருடன் தொடர்பில் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.

சம்பவ செந்தில் இப்போது வெளிமாநிலம் அல்லது பங்களாதேஷில் இருப்பதாக ஸ்பெஷல் டீம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ செந்திலை கைது செய்து விசாரித்தால்தான், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஃபைனான்ஸ் செய்த தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள்.

மேலும், சிறையில் உள்ள கைதியின் மகன் போலீஸ் விசாரணைக்குள் வருவார். அதனால் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிக்குள்ளும் சலசலப்புகள் ஏற்படும்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

நமது நிருபர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்ஸ்ட்ராங் கொலை: மேலும் ஒருவர் கைது!

TNPL-ல் விளையாட வாய்ப்பு மறுப்பு… கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment