ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 13) உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைகார கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது வரை இந்த வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாகச் செயல்பட்ட முக்கிய குற்றவாளிகளான பொன்னை பாலு, அருள், ராமு உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முன்னாள் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை கடந்த 7ம் தேதி செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் சிறையில் இருக்கும் பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகன் ஆவார்.
அஸ்வத்தாமனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலப்பிரச்சனையிலும், பார் கவுன்சில் தேர்தலிலும் அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே பகை இருந்தது தெரிய வந்தது. மேலும் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ரவுடி சம்போ செந்திலுடனும் அஸ்வத்தாமன் தொடர்பில் இருந்ததும் அம்பலமானது.
இதனையடுத்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்ற உத்தரவிட்டதன் பேரில் அஸ்வத்தாமன் கடந்த 8ஆம் தேதி பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அஸ்வத்தாமனை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினார். அப்போது, முக்கிய குற்றவாளியாக கருதப்படுவதால், அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் கேட்கப்பட்ட நிலையில், அவருக்கு 4 நாட்கள் காவலுக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
GOAT Trailer : அப்டேட்-க்கு ஒரு அப்டேட் ஆ… கடுப்பில் விஜய் ரசிகர்கள்!
தருமபுரி மக்கள் டாஸ்மாக் கடையை கேட்கவில்லை : அன்புமணி ராமதாஸ்