ஆம்ஸ்ட்ராங் கொலை… ஆற்காடு சுரேஷ் தம்பி கொடுத்த வாக்குமூலம்!

Published On:

| By Kavi

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருந்து வந்தார். இவர் நேற்று(ஜூலை 5) இரவு பெரம்பூரில் தனது வீடு  கட்டுமான பணி நடக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது 5 பைக்குகளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல்   அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, இவர்களில் 2 பைக்குகளில் வந்தவர்கள் தனியார் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஊழியர்கள் அணியும் உடையை அணிந்து வந்துள்ளனர்.

அவர்கள்  கொலை செய்துவிட்டு தப்பியோடியதும், உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை அருகில் இருந்த அவரது ஆதரவாளர்கள் மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது ராஜிவ் காந்தி  மருத்துவமனையில் மருத்துவ குழு அவரது உடலை உடற்கூராய்வு செய்து வருகிறது.

இதனிடையே இந்த கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க்  மற்றும் செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பெரம்பூர் சுற்று வட்டார பகுதி சுற்றி வளைக்கப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலும் போலீசாரை அலர்ட் செய்தார் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க்.

இதனால் கொலை செய்தவர்களால் தப்பித்து செல்ல முடியாததால்,  8 பேர் நேற்று இரவே போலீஸில் சரணடைந்தனர்.

கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு புண்ணை பாலு, அவரது உறவினர் திருவேங்கடம் , வழக்கறிஞர் அருள், செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ் ஆகிய 8 பேர் சரணடைந்துள்ளனர்.

நேற்று இரவு நமது மின்னம்பலத்தில்  ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்கதான், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று  “ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ஆற்காடு சுரேஷ் கும்பல்? பகீர் தகவல்கள்!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக ஆற்காடு சுரேஷ் தம்பி புண்ணை பாலு சரணடைந்துள்ளார்.

அவரிடம்  போலீசார் விசாரித்ததில்,  ‘எங்கள் அண்ணன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் பின்னணியில் இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் . ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் கொலை செய்தோம்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த கொலை குறித்து கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், “10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 8 பேரிடம்   விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணையை தொடர்ந்து, கொலைக்கான நோக்கம் என்னவென்று தெரியப்படுத்துகிறோம். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் கிடைக்கும்” என்று கூறினார்.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கும்பல் ஆயுதங்களுடன் தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நெருக்கமானவர்கள் மீது குறைகாணும் மனநிலை ஏன் வருகிறது?

டாப் 10 செய்திகள் : ஆம்ஸ்ட்ராங் கொலையில் 8 பேர் சரண் முதல் திமுக உண்ணாவிரத போராட்டம் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share