இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் இன்று அதிகாலை ( செப்டம்பர் 7) கைது செய்தனர்.
ராகுல் காந்தி ’பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை இன்று கன்னியாகுமரியில் தொடங்குகிறார்.
தேசிய அளவிலான இந்த பயணத்தில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,600 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் நடைபயணமாக செல்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ’கேபேக் ராகுல் ‘ என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்ட இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத், “எது நடப்பினும் நாளை தமிழகம் வரும் ராகுலுக்கு கறுப்புக் கொடி இந்து மக்கள் கட்சி காட்டுவது உறுதி” என்று பதிவிட்டிருந்தார்.
கன்னியாகுமரி யாத்திரை தொடங்கும் பகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட திட்டமிட்ட அர்ஜூன் சம்பத், கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் கன்னியாகுமரி செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி,
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காத்திருந்த போலீசார் அர்ஜூன் சம்பத்தை இன்று அதிகாலை கைது செய்தனர். அவர் தற்போது திண்டுக்கல் வடக்கு நகர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை காரணாமக அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மோடி ஆட்சி மீது வெறுப்பு அதிகரித்துள்ளது: ராகுல் காந்தி