அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அர்ஜூன் சம்பத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதியளித்துள்ளது.
வரும் 14ம் தேதி இந்திய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கிய பாரத ரத்னா அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் அவரது சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்துவது வழக்கம்.
அதன்படி சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுக உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்துவர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிவரும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தும் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி கோரினார். ஆனால் அதற்கு பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீசார் அனுமதி வழங்கவில்லை.

முன்னதாக அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று காவி உடை, விபூதி, குங்குமம் பூசிய அம்பேத்கர் படத்தை அச்சிட்டு கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் அர்ஜூன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சியினர் ஒட்டியிருந்தனர்.
இது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்து மக்கள் கட்சி நிர்வாகி குருமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளன்று அவருக்கு மரியாதை செலுத்த அனுமதி அளிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் சென்னை வடக்கு மண்டல வழக்கறிஞர் பிரிவு தலைவரான ஏ.அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று (ஏப்ரல் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த காலங்களில் மனுதாரர் கட்சியினர் மாலை அணிவிக்க சென்றபோது ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை காவல்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து கடந்த முறை அளித்த உத்தரவாதத்தை போல மீண்டும் இந்த முறை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட இந்து மக்கள் கட்சி சார்பில், “அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, சந்தனபொட்டு, விபூதி, குங்குமம் போன்றவற்றை அணிவிக்க மாட்டோம். பிறரை பற்றி கோஷங்கள் எழுப்ப மாட்டோம்.
பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம். காவல்துறை வாகனத்தில் சென்று வருவோம்” போன்ற உத்தரவாதங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்த நிபந்தனைகளுடன் அர்ஜுன் சம்பத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், “இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 9 நபர்கள் மட்டும், காவல்துறை வாகனத்தில் சென்று மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்” என்று நீதிபதி சுந்தர் மோகன் உத்தரவிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழில் சி.ஆர்.பி.எப் தேர்வு: மத்திய அரசு மறுப்பு?
CSK VS RR உத்தேச ஆடும் 11 வீரர்கள்!
