அரியலூர் அருகே தவெக கட்சியில் பெண்களுக்கு உரிய மதிப்பில்லை என்று குற்றம்சாட்டி, கட்சி கொடியை இறக்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடி காலனி தெருவில் வசித்து வரும் பிரியதர்ஷினி ஜெயபால், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கட்சியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று கூறி, பிரியதர்ஷினி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மகளிரணி நிர்வாகிகள் கட்சியில் இருந்து கூண்டோடு விலகியுள்ளனர்.
மேலும், அவர்கள் அப்பகுதியில் ஏற்றப்பட்டிருந்த தவெக கட்சி கொடியை இறக்கியுள்ளனர். இந்த சம்பவம் தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பிரியதர்ஷினி செய்தியாளர்களிடம் கூறும்போது, “தவெக சார்பில் பல ஊர்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டு கட்சிப்பணி ஆற்றி வந்தேன். ஆனால், எனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை.
கட்சியில் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று தலைவர் விஜய் சொல்லியிருக்கிறார். ஆனால், மாவட்ட நிர்வாகிகளோ, அவர்களே கட்சியில் அனைத்து பணிகளையும் செய்ததைப் போல காட்டிக்கொள்கிறார்கள். அதனால் தான் கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்துள்ளோம்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தவெக மூத்த நிர்வாகிகள் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,
“தவெக பொருளாளர் வெங்கட் என்கிற வெங்கட்ராமன் சினிமா துறையில் விஜய்யின் வரவு செலவு கணக்குகளை கவனித்து வந்தார். விஜய்க்கு மிகவும் நம்பிக்கையானவர். கட்சி ஆரம்பித்ததும் வெங்கட்ராமனுக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டது.
அப்போதே, புஸ்ஸி ஆனந்த் ஆதரவாளர்களுக்கு அவரை பிடிக்கவில்லை. இந்தசூழலில் தான் புஸ்ஸி ஆனந்தால் கட்சியில் பொறுப்பு கிடைக்காத முன்னாள் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் வெங்கட்ராமனை சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பானது அனைத்து மாவட்ட அளவிலும் விரிவடைந்துள்ளது. இந்த விஷயம் விஜய்யின் கவனத்துக்கு சென்றுள்ளது.
அப்போது ‘விஜய் ரசிகர் மன்றத்தில் ஆக்டிவாக இருந்த நிர்வாகிகளுக்கும், இப்போது கட்சியில் ஆக்டிவாக இருக்கும் இளைஞர்களுக்கும் புஸ்ஸி ஆனந்த் பொறுப்பு கொடுக்காமல் இருப்பதால் அதிருப்தியில் அவர்கள் இருக்கிறார்கள்’ என்று வெங்கட்ராமன் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்.
இதனால், வெங்கட் ராமன் ஆதரவாளர்களுக்கும், புஸ்ஸி ஆனந்த் ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. இதன் எதிரொலியாக தான் அரியலூரில் மகளிரணி நிர்வாகிகள் கூண்டோடு இன்று விலகியுள்ளனர்” என்கிறார்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…