”நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் சதி செய்கின்றனர்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு சார்பில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (நவம்பர் 29) அரியலூர் மாவட்ட கொல்லாபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின், பயனாளிகளுக்கு ரூ. 78 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம். கலைஞரை தலைவராக எழவைத்த மாவட்டம்தான் இந்த அரியலூர்.
கனிமங்கள் நிறைந்த இந்த பகுதியில் கழகத்திற்கு, நமது ஆட்சிக்குக் கிடைத்த வைரக்கல்தான் அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்.
அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக, எஸ். எஸ். சிவசுப்பிரமணியன் அவர்களின் பெயரைக் காப்பாற்றக்கூடிய பிள்ளையாக நம்முடைய சிவசங்கர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
சட்டமன்றம், மக்கள் மன்றம், சமூக வலைதளங்கள் என எதுவாக இருந்தாலும் சரி, கட்சி மீதோ அல்லது தலைமை மீதோ ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால், அதை முன் நின்று தடுக்கக்கூடிய களப்போராளி அமைச்சர் சிவசங்கர்.
அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராய்ப் பொறுப்பேற்ற பிறகு பல சாதனைகளைச் செய்துள்ளார்.
அரியலூரில் ஏராளமான அரசுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழ்வாராய்ச்சி பணிக்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் வாயிலாக 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழின் தொன்மையையும் தமிழ் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தொல்லியில் துறையில் மறுமலர்ச்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்படும். அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பின் தங்கிய பகுதிகள் என எதுவும் இருக்க கூடாது. அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம்.
இவையனைத்தும் ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் தற்போதைய திமுக ஆட்சி.
ஒரு முதல்வர் எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் கடந்தகால ஆட்சி. கடந்த 10 ஆண்டுக்காலத்தை நாசமாக்கியவர்கள், இன்று, அதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து ஆளுநரிடம் போய் புகார் கொடுக்கின்றனர்.
அவர்கள் கொடுக்கும் பேட்டியைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். ’உங்கள் யோக்கியதைதான் எங்களுக்கு தெரியுமே’ என நினைத்து மக்களும் ஏளனமாய் சிரிக்கிறார்கள்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என சிலர் சதி செய்கின்றனர். அய்யோ, கெடவில்லையே எனச் சிலர் வருத்தப்படுகிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் தமிழகம் அமைதியாக இருக்கிறது என வயிறு எரிகிறது. புலிக்குப் பயந்தவன் என்மீது வந்து படுத்துக்கொள் என்று சொல்வதை போல சிலர் ஆபத்து, ஆபத்து என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி சொல்லும் சிலருக்கு, இருக்கும் பதவி நிலைக்குமா என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் மக்களைப் பார்த்து ஆபத்து, ஆபத்து என அலறுகிறார்கள்.
மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்தில்லா ஆட்சியாகத்தான் இந்த ஆட்சி உள்ளது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
ஜல்லிக்கட்டு வழக்கு: மீண்டும் இன்று விசாரணை!
முடிவுக்கு வரும் முதற்கட்ட பிரச்சாரம்: களைகட்டும் குஜராத் தேர்தல்!