Arignar Anna is a Research Leader

அண்ணா என்றொரு அறிஞர்! 

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாலசுப்ரமணியம் முத்துசாமி 

1984 ஆம் ஆண்டு வேளாண் கல்லூரியில் சேர்ந்தேன். இரண்டாவது பருவத்தில் வேளாண் பொருளியல் சொல்லிக் கொடுத்தார்கள்.

இந்தியாவில் 70% மக்கள் வேளாண்மையில் உள்ளார்கள். அதில் மிகப் பெரும்பான்மை (80%) உழவர்கள் 2.5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள். இதனால், அவர்களால், உயர் தொழில் நுட்பம், வீரிய விதைகள் முதலியவற்றில் முதலீடு செய்ய முடியவில்லை.

சிறு அலகுகள் என்பதால், இயந்திரமயமாக்கம் சாத்தியமில்லை. எனவே வேளாண் பண்ணைகள் பெரிய அலகுகளாக மாறி, இயந்திரமயமாகி, வேளாண்மையில் உயர் தொழில் நுட்பங்கள், வீரிய விதைகள் முதலியவை  உபயோகிக்கப்பட்டால் மட்டுமே வேளாண்மை முன்னேறும் எனத்  தீர்வு சொன்னார் என் பேராசிரியர்.

என் தந்தை ஒரு உழவர். 2.5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர். கைக்கும் வாய்க்கும் எட்டாத ஒரு  வாழ்க்கை. ஒரு 20 ஏக்கர் நிலம் இருந்திருந்தால் படிக்கவே வந்திருக்க வேண்டாம் என ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு, என் பொருளியல் பேராசிரியர் சொன்னது மிகச்சரியாக இருப்பதாகத்  தோன்றியது. அவர் சொன்னதை, யோசிக்காமல் பல காலம் நம்பிக் கொண்டிருந்தேன்.

மேலாண்மை படித்து விட்டு, பணிபுரியத் தொடங்கிய காலங்களில் வேளாண்மையை, அதன் பிரச்சினைகளை அனுபவ பூர்வமாக அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் தனிப்பட்ட தேடலின் ஒரு பகுதியாக காந்தியையும் குமரப்பாவையும் அணுகிப் படிக்க நேர்ந்தது.

இந்தப் பயணத்தில்தான், எனது வேளாண் பொருளாதார பாடத்திட்டத்தை உருவாக்கியவர்களும், அதைச் சொல்லிக் கொடுத்த என் பேராசிரியரும், மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் சொன்னதை அப்படியே நகலெடுத்து எங்கள் மூளைக்குள் செலுத்தியிருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்டேன்.

காந்தியின் வழிகாட்டுதலில் குமரப்பா, மட்டார் தாலுகா என்னும் பகுதியில் ஒரு பொருளாதார ஆய்வை மேற்கொண்டார். அதன்  முடிவுகளில் குமரப்பாவின் பொருளாதார அணுகுமுறையின் தனித்துவம் தெரிய வருகிறது. மட்டார் தாலூக்காவில், சராசரியாக  5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் உழவரின் வரவு செலவையும், அமெரிக்காவின் கூலித் தொழிலாளி ஒருவரின் வரவு செலவையும் ஒப்பிடும் குமரப்பா, அமெரிக்காவின் கூலித் தொழிலாளி தனது வருமானத்தில், உணவு, உடை மற்றும் உறைவிடத் தேவைகளுக்காக 50% வரை செலவிடுகிறார். ஆனால், சராசரியாக 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் மட்டார் தாலூக்கா உழவர், இதே தேவைகளுக்காக தன் வருமானத்தில் 90%த்தை செலவிட நேர்கிறது என்பதைக் கண்டறிகிறார்.

அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், சராசரி இயற்கை வளம் குறைவு. எனவே குறைவான தனிநபர் நில அலகு என்பது இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்புச் சிக்கல். இதை மாற்றுவது சாத்தியமல்ல.

இந்திய வேளாண்மையின் பிரச்சினை என்பது, சிறு அலகு வேளாண்மை மட்டுமல்ல. வேளாண் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததுமே. வேளாண் பொருளைக்  கொள்முதல் செய்ய பணம் வைத்திருக்கும் வணிகரும், அதே மதிப்புக் கொண்ட வேளாண் பொருளை உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வரும் உழவரும் சமபலம் கொண்டவர்களல்ல.

சந்தையில் வணிகரின் கையே ஓங்கியிருக்கிறது. எனவே உழவரின் உற்பத்திக்கு சரியான விலை பெரும்பாலும் கிடைப்பதில்லை. இந்த சிக்கல் களையப்பட வேண்டும் என காந்தியும், குமரப்பாவும், ஊரக வேளாண்மை மற்றும் தொழில்களை மேம்படுத்த, ‘அகில இந்திய ஊரகத் தொழில் கட்டமைப்பு’, என்னும் நிறுவனத்தை உருவாக்குகிறார்கள். இந்தப் பின்புலத்தில் இருந்து உருவாகி வந்தவைதான் காதி மற்றும் அமுல் மாதிரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு தொழில்கள்.

ஆனால், அக்கால கட்டத்தில், நேரு தொடங்கி பொருளியல் அறிஞர்கள், திட்ட வடிவமைப்பாளர்கள் வரை ஒருவருமே இந்தக் கட்டமைப்புச் சிக்கலை உள்வாங்கிக் கொள்ளவே இல்லை. அவர்கள் கனவுகளும் யோசனைகளும், பெரும் பண்ணைகள், இயந்திரமயமாக்கம் என்றே இருந்தன. ஆனால், காந்தியும் குமரப்பாவும் நடைமுறைச் சிக்கல்களை உள்வாங்கியது போன்றதொரு சிந்தனை பிற்காலத்தில் இன்னொரு தலைவரிடம் இருந்து வெளிப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. அவர், காங்கிரஸ் பேரியக்கத்தை தேர்தலில் வீழ்த்தி, தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்த அண்ணா.

தமிழ்நாட்டு முதல்வர் அண்ணா, அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்று திருப்பியதும், அகில இந்திய வானொலிக்கு அளித்த நேர்காணல் வழியே, அவரது சிந்தனைகளின் ஒரு பகுதி நமக்கு கிடைக்கிறது.

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்துக்குச் செல்லும் அண்ணா, அங்கே ஒரு பெரும் வேளாண் பண்ணையைக் காணச்செல்கிறார். அந்த 900 ஏக்கர் பண்ணையை, பெரும் டிராக்டர்கள், இயந்திரங்களின் வழியே தந்தை மகன் என இருவர் மட்டுமே நிர்வகிக்கிறார்கள்.

அமெரிக்க விஜயம் முடிந்த பின்னர், ஜப்பான் செல்கிறார். அங்கு டோக்கியோ நகரில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு நகருக்குப் பயணம் செய்யும் அண்ணா ரயில் பயணத்தில் இருபுறங்களிலும் உள்ள வயல்களையும், வேளாண் நடவடிக்கைகளையும் கவனிக்கிறார்.

இந்த இரண்டு நாடுகளிடம் இருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினைகள் என்ன என்னும் கேள்விக்கு அண்ணா சொல்லும் பதிலில் இருந்து, அவரது எண்ணங்களை, அறிவார்ந்த அணுகுமுறையை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

‘அமெரிக்க நாடு இந்தியாவை விட ஆறு மடங்கு பெரியது. இந்திய மக்கள் தொகையை விட மூன்று மடங்கு குறைவாகக் கொண்டது. அங்கே 7% மக்களே வேளாண்மையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தியாவிலோ 80% மக்கள் வேளாண்மையில் இருக்கிறார்கள். எனவே மிக இயல்பாக அமெரிக்காவில் பெரும் பண்ணைகளும், இயந்திரமயமாக்கலும் உருவாகி எழுந்து வந்துள்ளது. ஆனால், இந்தியாவில் அது போன்ற பண்ணைகளை உருவாக்க வேண்டுமென்றால், பெருமளவு மக்களை வேளாண்மையை விட்டு வெளியேற்ற நேரிடும். அது சாத்தியமில்லை.

மாறாக, நமக்கான முன்மாதிரியாக நாம் ஜப்பானைத்தான் கொள்ள வேண்டும். அங்கே பயணிக்கையில் கவனித்தேன். அங்கே வேளாண் அலகுகள் மிகச் சிறியவை. 3 ஏக்கர், 5 ஏக்கர் பண்ணைகள்தாம் பெரும்பாலும் உள்ளன. அதற்கேற்றார்போல டில்லர், ஸ்ப்ரேயர் போன்ற சிறு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இது போன்ற ஒரு அணுகுமுறைதான் நம் நாட்டுக்குப் பொருந்தி வரும்.

தொழிற்சாலைகளை உருவாக்குகையில், அமெரிக்கா போன்ற நாடுகளில், குறைவான மக்கள் தொகை காரணமாக, இயல்பாகவே இயந்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நம் நாட்டில், மனித வளம் கூடுதலாக உள்ளது. எனவே நம் நாட்டில் தொழிற்சாலைகள் மனித வளத்தைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்க வேண்டும். வருங்காலத்திலும் (for a long time to come) இதுவே சாத்தியமான ஒன்றாக இருக்கும்’, என்கிறார் அண்ணா.

அண்ணாவின் இந்த நேர்காணல் வெளிவந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. அண்ணாவின் சிந்தனை இந்தக் காலத்தைக் கடந்து இன்றும் உண்மையாக நிற்கிறது.

அதே நேர்காணலில், இந்திய ஜனநாயகம் தொடர்பான கேள்விகள் எழுகின்றன. அண்ணா சொல்கிறார், ‘ஆசியா தொடர்பான ஆய்வுகள் செய்யும் பேராசிரியர்கள், இந்தியாவை முக்கியமான ஒரு ஜனநாயகப் பரிசோதனைக் கூடமாக பார்க்கிறார்கள். ‘இந்தியாவில் ஜனநாயகம் நீடித்து நிலைக்குமா’, எனக் கேட்டார்கள்.  ‘நிச்சயம் நீடித்து நிலைக்கும்’, எனப் பதிலளித்தேன். ‘இன்றைய மத்திய அரசு பலவீனமாக உள்ளதே.. அதற்கு மாற்றாக ஒரு தேசியக் கூட்டணி அரசு அமைந்தால், அதில் பங்கு பெறுவீர்களா’, எனக் கேட்டார்கள்.. “I will resist that temptation’, எனச் சொன்னேன்’. அன்றைய அரசியல் நிலையை உணர்ந்த ஒரு பெரும் தலைவரின் நிலைப்பாடு அதில் இருக்கிறது.

அண்ணா, நேருவைப் போலவோ அல்லது அம்பேத்கரைப் போலவோ வெளிநாடுகளின் உயர் கல்வி நிறுவனங்களில் பயின்றவரல்ல. உலகளாவிய தலைவர்களைக் கண்டு அளவளாவும் வாய்ப்புகளை பெற்றவரல்ல. அவரது உயர் கல்வி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அமைந்தது. ஆனாலும் தான் பயின்ற கல்வியைத் தாண்டி பல்வேறு அரசியல் அறிஞர்களை, தத்துவங்களை, வரலாற்றைத் தன்முனைப்பால் கற்றறிந்தவர். அவற்றின் துணைகொண்டு, தனித்துவமான சிந்தனையாளராக உயர்ந்தவர்.

இந்த உரையாடல் முழுவதுமே அண்ணாவின் தெளிவான சிந்தனைகள் ஆற்றொழுக்கான ஆங்கிலத்தில் வெளிப்படுகின்றன. அண்ணாவின் அரசியல் நிலைப்பாடுகள், தமிழ், தமிழ்நாடு என்னும் புள்ளியில் மையம் கொண்டிருந்தாலும், அவரின் பொருளியல் மற்றும் அரசியல் சிந்தனைகள் மனித குலத்துக்கே பொதுவானவை. பொருளாதார வளர்ச்சி (GDP Growth), தொழில்மயமாக்கம் (Industrialisation) என அரசு பொதுத் திட்டத் தளங்கள்  (Public Policy corridors) கொண்டிருந்த குவிமைய அணுகுமுறையைத் தாண்டி,  ‘மக்கள் நலத் திட்டங்களை (Welfare policy) நோக்கி தன் மாநிலத்தின் செயல்பாடுகளை மாற்றியமைத்தவர் அண்ணா.

ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்னும் அவரது அரசியல் முழக்கம்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின், உணவு உரிமைச் சட்டத்தின் (Right to Food) முன்னோடி. இன்று இந்தியாவெங்கும் அரசியல் கட்சிகள் வேறு வழியின்றி முன்னெடுக்கும் பல மக்கள் நலத் திட்டங்களுக்கு அண்ணாவின் சிந்தனைகள்தான் அடிப்படை என்றால் அது மிகையாகாது. உண்மையான முன்னேற்றம் என்பது பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருக்கும் சாமானியர்களின் முன்னேற்றம்தான். இதுதான் நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதம். அண்ணல் காந்தியடிகளின் செயல்திட்டங்களின் மையமும் இதுதான். அண்ணாவின் திட்டங்களும் அவற்றை நோக்கியே அமைந்திருந்தன.

ஆனால், இன்று ஒன்றிய, மற்றும் பெரும்பாலான மாநில அரசுகளின் பொருளாதார அணுகுமுறைகள் பெரும் பொருளாதார வளர்ச்சியை (Macro Economic Growth) ஓட்டியே அமைந்துள்ளன. தமிழ்நாட்டில், திராவிட சித்தாந்த அணுகுமுறையின் காரணமாக மக்கள் நலத்  திட்டங்கள் முன்னுரிமை பெற்றாலும், லாபகரமான வேளாண்மை மற்றும் நீடித்து நிலைக்க வேண்டிய சுற்றுச் சூழல் போன்ற முக்கியமான தளங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இன்று அண்ணா உயிருடன் இருந்திருந்தால் அவர் இவற்றையும் பேசியிருக்கும் சாத்தியங்கள் உண்டு.

பொதுநலத் திட்ட உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமெரிக்காவில் ஹார்வர்ட் கென்னடி பொதுநலத்திட்ட கல்வி நிலையம் (Harvard Kennedy School of Government)  என்னும் நிறுவனம் உண்டு. சிங்கப்பூரும் லீ க்வான் யூ பொதுநலத் திட்ட நிலையம் (Lee Kuan Yew institute of Public Policy) என்னும் நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறது.

அதே போல, இந்திய நாட்டில் மக்கள் நலக் கொள்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டை மேம்படுத்திய திராவிட இயக்கச் சிந்தனையாளரான அண்ணாவின் பெயரால் ஒரு பொதுநலத் திட்ட ஆராய்ச்சி நிறுவனம் (Anna Institute of Public Policy and Research) ஒன்றை உருவாக்கி, மக்கள் நலன், மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற தளங்களில் பொது நலத்திட்ட ஆராய்ச்சிகள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல் போன்ற தளங்களில் ஈடுபட ஒரு உலகளாவிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். அதுவே அண்ணா என்னும் சிந்தனையாளருக்கு நம் சமூகம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசியல் தத்துவத்தில் புதுப்பாதை அமைத்த அறிஞர் அண்ணா

பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!

உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தலித் அரசியலும், பொது சமூகமும்

ஆங்கிலோ இந்தியன் லேடியாக யோகி.. கவனம் ஈர்க்கிறதா மிஸ் மேகி?

உதயநிதிக்கு காலம் வழங்கிய 3 பேறு : வைரமுத்து வாழ்த்து!

ஹெல்த் டிப்ஸ்: உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு ஏற்படும் இடுப்புவலி… தீர்வு இதோ?

பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்திலும் உங்கள் கூந்தலை அழகாக வைத்துக்கொள்ளலாம்… எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *