பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்காத விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனையையும், தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் இழந்த எம்.எல்.ஏ.பதவி மீண்டும் பொன்முடிக்கு கிடைத்தது. அவரை மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.
ஆனால், “பொன்முடி நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்படவில்லை. அவர் மீதான குற்றங்கள் அனைத்தும் அப்படியேதான் இருக்கிறது. எனவே பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது” என்று ஆளுநர் அரசுக்குப் பதில் கடிதம் அனுப்பினார்.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று (மார்ச் 21) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், “நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுநர் செயல்படுகிறார். இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பொன்முடி எம்எல்ஏவாக தொடர்கிறார். அவருக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஆனால், இதற்கு ஆளுநர் மறுப்புத் தெரிவிக்கிறார். இதுபோன்ற செயல் கடந்த 75 ஆண்டுக்காலத்தில் நடந்தது இல்லை” என தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர் தரப்பில் ஒரு நாள் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
“ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்து வைக்கமாட்டேன் என்று எப்படி கூற முடியும். ஆளுநரிடம் சொல்லுங்கள் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தீவிரமாகக் கண்காணிக்கிறது.
தமிழ்நாடு ஆளுநர் உச்ச நீதிமன்றத்துடன் விளையாடுகிறாரா? ஆளுநர் சாதகமான முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இன்று ஒரு நாள்தான் கெடு.
இன்று இரவுக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று கூறி வழக்கை மார்ச் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
IPL: ஆபா்களை வாரி ‘வழங்கி’… வள்ளலாக மாறிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!
“ரயில் டிக்கெட் வாங்க கூட காங்கிரசிடம் நிதி இல்லை”: மோடி மீது சோனியா, ராகுல் புகார்!