“ராமதாஸும், அன்புமணியும் அரசியலில் இருந்து விலக தயாரா?” : கள்ளக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ.க்கள் கேள்வி!

Published On:

| By indhu

Are Ramadoss and Anbumani ready to quit politics? - DMK MLAs question

பாமக நிறுவனர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலக தயாரா என திமுக எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் இன்று (ஜூன் 22) கேள்வி எழுப்பி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் 141 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பாமகவினரால் குற்றஞ்சாட்டப்பட்ட ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் இன்று சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அபாண்டமான குற்றச்சாட்டு!

அப்போது பேசிய ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அவர்களை புறக்கணித்ததை மறைக்கும் வகையில், அதிமுக ஆட்சியிலும், பாஜக ஆட்சியிலும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற கள்ளச்சாராய விற்பனை குறித்து வாய் திறக்காமல் இருந்தார். தற்போது ஏதேதோ கூறுகிறார்.

தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இதை பொறுக்காமல் டாக்டர் ராமதாஸ் எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் நிரூபித்தால் நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலக தயார். அப்படி அவர் நிரூபிக்கவில்லை என்றால் அவர்கள் இருவரும் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலக தயாரா?

முதலில் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தபோது சரியாக மதியம் 1 மணி. நானும் அவருடன்தான் இருந்தேன். 1 மணி நிலவரப்படி, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாரும் உயிரிழக்கவில்லை.

இதுகுறித்து நாங்கள் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியபோது உடலை பரிசோதித்தபின்னர் தான் அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பது தெரியவரும் என்று கூறினார்கள். முதலில் உயிரிழந்த மூவரும் மருத்துவமனைகளில் உயிரிழக்கவில்லை. அவரவர் இல்லங்களில் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் கடந்த 4 நாட்களாக நானும், சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் இருவரும் இருந்தோம். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டுதான் இருந்தோம்.

எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே ஆளுங்கட்சியினருக்கு இதில் தொடர்புடையதாக கூறுகிறார்கள்” என்று பேசினார்.

அப்போது சிபிஐ விசாரணை வேண்டாம் என்றார்கள்!

அப்போது, கள்ளச்சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் வீட்டில் திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாக கூறுகிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், “தேர்தல் காலத்தில் அனைவரது வீட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதில் அதிமுக, திமுக என்றெல்லாம் இல்லை. அனைவரது வீட்டிலும் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதை வைத்து அவரை திமுகவை சேர்ந்தவர் என்று குறிப்பிட முடியாது.

கள்ளக்குறிச்சியில் 3 பேர் வாந்தி, வயிற்று எரிச்சல் போன்ற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிந்தவுடன் நாங்கள் அங்கு சென்றோம். பின்னர், இதுகுறித்து தெரிந்தவுடன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்தோம்.

பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிரிழப்பு அதிகமானதையடுத்து கூடுதல் மருத்துவர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, சேலம் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

மேலும், அமைச்சர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினர். அதோடு மருத்துவர்களிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்படுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பு அதிமுக எம்.எல்.ஏ., எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்ததாக கூறுகிறார்கள்.

அதற்கு என்ன ஆதாரம் உள்ளது? அரசியல் ஆதாயம் வேண்டி அதிமுகவினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இப்போது, திமுக எம்.எல்.ஏ.க்களான வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியன் ஆகிய எங்கள் மீது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள்.

மத்தியில் அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். அப்போது சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கூறியபோது, சிபிஐ விசாரணை வேண்டாம் என்று மறுத்தவர் யார்?

குற்றச்சாட்டை நிரூபித்தால்…

முதல்வர் ஸ்டாலின் 24 மணி நேரத்தில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய 9 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாமக கூட்டணி வைத்துள்ள பாஜக ஆளும் மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுத்ததால், வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல், உயிரிழந்தவர்கள் வீட்டிற்கு சென்று பாமகவினர் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம்?

எங்கள் மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலக நாங்கள் தயார். நிரூபிக்கவில்லை என்றால் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் பொதுவாழ்வில் இருந்து விலக தயாரா என்பது தான் எங்களது கேள்வி?

கல்வராயன்மலை மட்டுமல்லாமல், ஜவ்வாது மலை, ஏலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்கள் சாராயம் காய்ச்சுகின்றனர்.

சாராயம் என்பது வேறு, மெத்தனால், எத்தனால் என்பது வேறு. கல்வராயன் மலையை சுற்றி உள்ள 30 ஆயிரம் பேர் எனக்கு வாக்களிப்பதால் நான் அவர்களை காப்பாற்றுவதாக நேற்று அன்புமணி கூறினார்.

அப்படி நான் அவர்களை காப்பாற்றி இருந்தால் அதற்கான ஆதாரம் இருக்க வேண்டும். எங்களை வளர்த்தவர் கலைஞர், எங்களை ஆளாக்கிக்கொண்டு இருப்பவர் முதல்வர் ஸ்டாலின். அதனால், ஒருபோதும் தீய செயல்களில் நாங்கள் ஈடுபட மாடோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தோல்வியடைந்துவிட்டது. கள்ளக்குறிச்சியில் பாமகவின் பருப்பு வேகாது. எங்கள் மீது வீண்பழி சுமத்திய டாக்டர் ராமதாஸ் மீதும், அன்புமணி ராமதாஸ் மீதும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம்” என உதயசூரியன் பேட்டியளித்தார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டென்ஷன் இல்லாமல் வேலை செய்வது எப்படி?

’சென்னையில் மாடு வளர்க்க மீண்டும் தடை’ : தமிழக அரசுக்கு மாநகராட்சி கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share