அதிகாரிகள் பாஜகவுக்கு பயப்படுகிறார்களா? நேரு பேச்சின் பின்னணி இதுதான்!

அரசியல்

திருச்சியில் அமைச்சர் நேரு பேசிய பேச்சு தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்களிலும் அதிகாரிகள் வட்டாரங்களிலும் இன்னும் பேசுபொருளாக இருக்கிறது.

அக்டோபர் 31 ஆம் தேதி திருச்சி திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,

“இன்றைக்கு தமிழக கவர்னர் எதிர்க்கட்சியை போல செயல்படுகிறார். பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்குகிறார்கள். ‘என்னையா உங்க கட்சிக்காரர்களுக்கு எதுவும் நடக்கலையாமே’ இன்று அதிமுகவினரே சொல்லும் அளவுக்கு நேர்மையான ஆட்சி நடக்கிறது.

கடந்த காலத்தில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் ஆன போட்டி என்பது அண்ணன் தம்பி இடையிலான போட்டியாக இருந்தது. ஆனால் இப்போது சகல அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்களோடு போட்டி போடுகிறோம். எனவே மிக மிக கவனமாக செயல்படக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோம்.

அமைச்சராக இருக்கும் நிலையிலும் வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன். அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசுக்கு பயந்துகொண்டிருக்கிறார்கள்” என்று அமைச்சர் நேரு பேசிய பேச்சுதான் அரசியல் வட்டாரத்திலும் அதிகார வட்டாரங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வருக்கு மிக நெருக்கமான அமைச்சர்களில் நேருவும் ஒருவர். குறிப்பாக முதல்வரின் திருச்சி வருகையை ஒட்டி நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தான் இப்படி மாநில அரசின் அதிகாரிகளை மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் என்று பேசியிருக்கிறார், இந்த நிலையில் நேருவின் பேச்சு தலைமைச் செயலகம் மத்தியிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையிலேயே தமிழக அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் பேச்சை கேட்பதில்லையா? நேருவின் பேச்சின் பின்னணி என்ன என்று கோட்டை வட்டாரத்தில் அதிகாரிகள், அரசியல் புள்ளிகள் சிலரிடம் விசாரித்தோம்.

“அமைச்சர் நேருவின் வீடியோ வெளிவந்தவுடனேயே அவருக்கு நெருக்கமானவர்கள் நேருவுக்கு போன் செய்திருக்கிறார்கள். ‘என்னண்ணே இப்படி போட்டு உடைச்சிட்டீங்க” என்று கேட்க, ‘கட்சிக்காரன் எதுவுமே கிடைக்கலைனு நினைக்கிறான்யா. நம்ம நெலைமையும் இப்படித்தானே இருக்கு. கட்சிக்காரன்கிட்ட எனக்கு எதையும் மறைக்கத் தெரியாதுய்யா…’ என்றிருக்கிறார் நேரு.

Are officials afraid of BJP - Background of Nehru's speech

பத்து வருடங்களுக்குப் பின் 2021 மே மாதம் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுகவினர் கடும் பசியோடு இருந்தனர். ஆனால் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தார்.

‘பத்து வருசத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கோம். இந்த ஆட்சியை என்னை நம்பி மக்கள் கொடுத்திருக்காங்க. திமுக மேல வழக்கமாக சொல்லப்படுகிற புகார்கள் எதுவும் இனிமே வரக் கூடாது. குறிப்பாக போலீஸ் அதிகாரிகள்கிட்ட நீங்க எதுவும் பேசக் கூடாது. போலீஸ் துறைக்கு நான் தான் அமைச்சர். ஏதாச்சும் வேணும்னா என்னைக் கேளுங்க. அனாவசியமா போலீஸ் அதிகாரிகள்கிட்ட பேசக் கூடாது. எந்த அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் போலீஸ் ஸ்டேஷன் போகவே கூடாது’ என்று கடும் உத்தரவு போட்டார்.

இதன் பிறகு தனது குடும்பத்தினரை அழைத்த ஸ்டாலின், ‘இதைப் பாருங்க. மக்கள் என்னை நம்பி ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்திருக்காங்க. குடும்பத்தோட ஆதிக்கம் ஆட்சியில அறவே இருக்கக் கூடாதுனு நினைக்கிறேன்.

உங்களுக்கு ஏதாச்சும் தேவைன்னா என்கிட்ட சொல்லுங்க. என்னைத் தொடர்புகொள்ள முடியலைன்னா தினேஷ்கிட்ட சொல்லுங்க. மத்தபடி எந்த அதிகாரிகள்கிட்டையும் நீங்க பேசக் கூடாது’ என்று கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார்.

இந்த பின்னணியில்தான் திமுகவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினால் கூட அதிகாரிகள் ஏதும் செய்து தர மறுக்கிறார்கள். சில சமயம் சபரீசனின் சிபாரிசுகள் கூட தாமதமாகிக் கொண்டிருக்கின்றன.

அதேநேரம் அமைச்சர் நேரு பேசியபடி மத்திய அரசின் பிடியில் சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். ஆனால் நேரு கட்சியினரை திருப்திப்படுத்த முடியவில்லையே என்ற அதிருப்தியை மறைக்கத்தான் அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயந்து கொண்டிருப்பதாக திசை திருப்பிவிட்டிருக்கிறார்” என்கிறார்கள்.

வேந்தன்

”90 நாட்கள் பயன்படுத்தலாம்..!”ஆவின் அறிமுகப்படுத்திய புதிய பசும்பால்!

டி20 உலகக்கோப்பை: மழையால் தடைப்பட்ட இந்தியா-வங்கதேசம் போட்டி!

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *