நெல்லை பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், நாளை (ஏப்ரல் 18) அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
கடந்த 6ஆம் தேதி சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் மேலாளராக பணிபுரியும் சதீஷ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக தான் பணம் கொண்டு செல்லப்பட்டது என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், காவல்துறையினர் வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், நயினார் நாகேந்திரனின் பெயர் சேர்க்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக தாம்பரம் காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு எதிராக அத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் எல்.சி.எம் ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஒரு மனுவில், ”பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் ரூ.3.99 கோடி மூவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று கடந்த 5ஆம் தேதி திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரிடம் இருந்து ரூ.28.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு மனுவில், “தேர்தல் நடத்தை விதிமீறல் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மனுக்களும் இன்று ஏற்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா அமர்வில் நாளை அவசர வழக்காக விசாரணைக்கு வர உள்ளது.
வரும் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், திருநெல்வேலி தொகுதியின் முக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா