மேகாலயா ஒன்றும் இந்தி பேசும் மாநிலம் கிடையாது என்று கொதித்தெழுந்திருக்கிறார் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ வும் வி.பி.பி (Voice of People Party) கட்சியின் தலைவருமான அர்டென்ட் மில்லர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி வெளியான நிலையில் தேசிய மக்கள் கட்சி ( National People’s Party ) தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருக்கிறது.
இந்த கூட்டணியில் என்.பி.பி (National People’s Party ) யு.டி.பி (United Democratic Party) பி.டி.எஃப் ( People’s Democratic Front ) ஹெச்.எஸ்.பி.டி.பி ( Hill State People’s Democratic Party ), பாஜக, சுயேட்சைகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேகாலயா முதல்வராக தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கன்ராட் சங்மா பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், கன்ராட் சங்மா முதலமைச்சராக பதவி ஏற்ற பின் நடைபெற்ற முதல் கூட்டத் தொடர், மாநில ஆளுநர் பகு சவுகான் உரையுடன் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் பகு சவுகான், இந்தி மொழியில் ஆளுநர் உரையை வாசித்தார். இது மேகாலயா சட்டசபையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போது, எதிர்க்கட்சியான வி.பி.பி (Voice of People Party) கட்சியின் தலைவரும் Nongkrem தொகுதி எம்.எல்.ஏ வுமான அர்டென்ட் மில்லர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அர்டென்ட் மில்லர் “மேகாலயா ஒன்றும் இந்தி பேசும் மாநிலம் கிடையாது. முன்னதாக அசாம் மொழி எங்கள் மீது திணிக்கப்பட்டதை எதிர்த்து தான் தனி மாநிலம் பெற்றோம். மீண்டும் வேறு ஒரு மொழியை திணிக்க வேண்டாம். எங்களுக்கு புரியும் மொழியில் ஆளுநர் பேச வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இந்த சூழலில் ஆளுநர் ஆங்கிலத்தில் படிப்பது கடினம். அதனால் தான் இந்தியில் பேசுவதாக சபாநாயகர் தாமஸ் ஏ.சங்மா, முதல்வர் கன்ராட் சங்மா ஆகியோர் தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்காமல் தொடர் கோஷங்கள் எழுப்பி வி.பி.பி கட்சி எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி சட்டமன்றத்தில் இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்க முடியாது என்று முதல்வர் கன்ராட் சங்மா கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் தாமஸ் ஏ.சங்மா, ஆளுநர் இந்தியில் பேச அனுமதிக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ஆளுநரின் உரை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தேவையற்ற சர்ச்சையை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதனால் வி.பி.பி கட்சியின் தலைவரும் நோங்க்ரெம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அர்டென்ட் மில்லர் வெளிநடப்பு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தி பேசாத மாநிலங்கள் எவை என்பதை மத்திய அரசு முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாநில மொழியில் பேசும் மக்களிடம் இந்தியை கொண்டு வந்து திணிக்கக் கூடாது.
இந்தி பேசும் ஆளுநர்களை யார் கேட்டார்கள். அவர்களை வேண்டுமென்றே மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. இவர்கள் பேசும் மொழியை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அவையில் இருந்து வெளியேறினோம்.
இந்தியில் ஆளுநர் பேசுவதை அவமானமாக உணராதவர்கள் அவையிலேயே அமர்ந்து பேச்சை கேட்கட்டும். மேகாலயா மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அரசு நடந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“ஓபிஎஸ் தான் எங்களை நீக்கினார்”: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் காரசார வாதம்!
பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு!