சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ்வாதி தேசிய கட்சியின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் தலித் சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடி வந்தவர். அந்த சமுதாயத்துக்காக போராட நிறைய வழக்கறிஞர்கள் வரவேண்டும் என்று தொடர்ந்து பலரை வழக்கறிஞர்களாக ஆக்கியவர்.
பரபரப்பான நபராகவே அறியப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கின் மரணமும் பெரும் பரபரப்பான சம்பவமாகவே நடந்திருக்கிறது.
இன்று (ஜூலை 5) மாலை 7 மணியளவில் சென்னை பெரம்பூர் சடையப்பன் தெருவிலுள்ள தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தார் ஆம்ஸ்ட்ராங். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பித்து ஓடிய ஆம்ஸ்ட்ராங்கை விடாமல் வெட்டிச் சிதைத்துவிட்டு தப்பிச் சென்றது அந்த கும்பல்.
உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங் அவசர அவசரமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் கடுமையான வெட்டுக் காயங்கள் அதிகமாக இருந்ததால்… சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஆம்ஸ்ட்ராங்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவங்கள் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் அமைந்த நிலையில், அந்த விவகாரம் ஓயும் முன்னே சென்னையில் அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் தெருவிலேயே வைத்து வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தலித் கட்சியின் மாநிலத் தலைவர் என்பது கூடுதல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த நிலையில் உடனடியாக அவரது உடலை போஸ்ட் மார்ட்டத்துக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் போலீஸார். ராஜீவ் காந்தி மருத்துவமனை வாசல் முழுதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதேபோல பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டு சம்பவ இடத்தின் சிசிடிவி ஃபுட்டேஜுகள் சேகரிக்கப்பட்டிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு இருந்த முன் விரோதம் பற்றியும் விசாரணை வேகமெடுத்திருக்கிறது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது யார் என போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தோம்.
“ ஆம்ஸ்ட்ராங்குக்கு முன் விரோதங்கள் தொடர்ந்து இருந்தாலும் லேட்டஸ்டாக அவர் மீது கோபத்தில் இருந்தது யார் என்ற கோணத்தில் விசாரித்தது போலீஸ்.
அப்போதுதான் ஒரு விஷயம் தெரியவந்திருக்கிறது. வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள புண்ணை கிராமத்தை சேர்ந்தவர் ரவுடி சுரேஷ். இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காஞ்சி சங்கரராமன், ரவுடி ராதாகிருஷ்ணன், சின்னா மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் கொலை என கொலை வழக்குகளும், மேலும் வழிப்பறி வழக்குகளும் இவர் மீது உள்ளன. 8 முறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தை தாண்டி ஆந்திராவிலும் இவர் மீது வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2023 ஆகஸ்ட் 18ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷ், தனது வழக்கறிஞருடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு புளியந்தோப்பு மாதவன் உட்பட சில நண்பர்களுடன் மெரினாவை அடுத்த பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்றார். பட்டினப்பாக்கத்தில் மணல்பரப்பில் அமர்ந்து மாதவனுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று ஆற்காடு சுரேஷையும், மாதவனையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆற்காடு சுரேஷ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த மாதவன் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.
ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் ஜோகன் கென்னடி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தின் முக்கிய சாட்சியாக இருந்த மாதவனையும் அந்த கும்பல், ஆற்காடு சுரேஷை கொலை செய்த 5 மாதங்களில் அதாவது கடந்த ஜனவரி மாதம் கொலை செய்தது.
ஆற்காடு சுரேஷ் கொலை பின்னணியில் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஆற்காடு சுரேஷ் அந்நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்.
ஆனால், ஆருத்ரா கோல்டு பண மோசடியில் பாதிக்கப்பட்ட சிலருக்கு, தற்போது கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் பணத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறார்.

அந்த சமயத்தில் தான் பட்டினப்பாக்கத்தில் வைத்து ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதன் பின்னால் ஆம்ஸ்ட்ராங் மீது சந்தேகப்பட்டு சுரேஷ் தரப்பினர் கடும் கோபம் கொண்டனர். ஆற்காடு சுரேஷின் தம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து கண்காணித்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில் தான் இன்று மாலை இருள் சூழ்ந்த நிலையில் பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே வைத்து கொல்லப்பட்டிருக்கிறார். பட்டினப்பாக்கம் கொலைக்கு பழி தீர்க்கத்தான் பெரம்பூரில் வைத்து ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி, பிரியா
ஆம்ஸ்ட்ராங் கொலை… எடப்பாடி கண்டனம்!
புதிதாக 1.48 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை: ஸ்டாலின் அறிவிப்பு!