ஆதாரம் இருக்கிறது: எடப்பாடி மீதான டெண்டர் வழக்கில் அறப்போர் இயக்கம்!

அரசியல்

“எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால், மானநஷ்ட ஈடு கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என அறப்போர் இயக்கத்தின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 19) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 முதல் 2021ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி,

தலைமைச் செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறைகளிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

இதனால், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது.

இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மனஉளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

மான நஷ்டஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடவும் அறப்போர் இயக்கத்திற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தார்.

அறப்போர் இயக்கம் பதில் மனு!

இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 19) சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “விதிமுறைகளை பின்பற்றாமல் டெண்டர் வழங்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மேலும், ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளிக்கப்பட்ட புகாரை சமூக வலைதளங்களில் வெளியிட்டதில் அவதூறு இல்லை. டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதில் ஏதேச்சதிகார போக்கும், ஒரு தரப்பினருக்கு சாதகமாகவும் செயல்பட்டுள்ளனர்.

புகார் அளித்ததற்காக அவதூறு வழக்கு தொடர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உட்பட பல உயர்நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பு இருக்கிறது.

ஆகையால், எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால், மானநஷ்ட ஈடுகோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என அறப்போர் இயக்கத்தின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ.பிரகாஷ்

நெடுஞ்சாலைத் துறை முறைகேடு: விசாரணை வளையத்தில் எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.