“பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில், வழிகாட்டி மதிப்பை உயர்த்தி நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு இழப்பு ஏற்படும் மோசடி வேலையைச் செய்திருக்கின்றனர்” என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 12 கிராமங்களில், 4,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், 2,400 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்களாகும்.
இந்த நிலையில், பரந்தூரில் ஒரு சிறிய பகுதியை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததன் மூலமாக அரசுக்கு கிட்டத்தட்ட 165 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட இருப்பதாக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 20) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம் வெங்கடேசன், “பரந்தூர் மற்றும் நெல்வாய் கிராமங்களில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களின் நிலபத்திரங்கள் மார்ச் 2020இல் காஞ்சிபுரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வழங்கப்பட்டது.
ஆனால் இந்த ஆவணங்கள் தொடர்பாக சார் பதிவாளர் ஆர்.பிரகாஷ் பல்வேறு பிரச்னைகளை எழுப்பினார். மேலும், கிராம வரைபடம், சான்றிதழ்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சர்வே எண்கள் இன்னும் ஏக்கர் கணக்கில் உள்ளன.

பசுமை விமான நிலையத் திட்டம் கருத்தியல் நிலையில் இருந்ததாலும், பதிவுக்காக வழங்கப்பட்ட பத்திரங்கள், பல சர்வே எண்களில் உள்ள பெரிய அளவிலான நிலத்தை சதுர அடியாக மாற்றி இழப்பீட்டு தொகையை அதிகமாக பெற பத்திரங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், ஏக்கரில் உள்ள வழிகாட்டி மதிப்பைவிட சதுர அடியில் வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருப்பதால் இப்படி , பதிவு செய்வதால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என சார் பதிவாளர் ஆர்.பிரகாஷ் எச்சரித்துள்ளார். இதனால் சார் பதிவாளர் ஆர்.பிரகாஷ் உடனடியாக மாற்றப்பட்டார்.
அவருக்குப் பதிலாக ராஜதுரை என்ற சார் பதிவாளர் அங்கு கொண்டுவரப்பட்டார். அவர் அந்த இடத்துக்கு வந்ததும், அதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஜூலை 2020 இல் பதிவு செய்யப்பட்டது.
இதன்மூலம் மோசடி மற்றும் கையாடல் நடைபெற்றுள்ளது. அதாவது கிராமத்தில் ஒரு ஏக்கருக்கு வழிகாட்டி மதிப்பு ரூ. 8.71 லட்சம். ஆனால் 49.5 சென்ட் நிலம் சதுர அடியில் ரூ. 32.40 லட்சம். அதாவது 1 ஏக்கர் அல்லது 43560 சதுர அடியின் வழிகாட்டி மதிப்பு ரூ.65.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பதிவுத் துறையின் மோசடி மற்றும் கையாடல் மூலம் நிலத்தின் மதிப்பு ரூ.8.71 லட்சத்தில் இருந்து ரூ.65.45 லட்சமாக அதிகரித்துள்ளது. இது நிலம் கையப்படுத்தும் நேரத்தில் கருவூலத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதாவது அரசு 73 ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.165 கோடி செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பான ஆவணங்களை இணைத்து தலைமைச் செயலாளர் வி.இறையன்பு, வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகம் ஆகியோரிடம் அறப்போர் இயக்கம் அளித்திருப்பதாகவும் தெரிவித்த அவர், இதன்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், பத்திரப்பதிவை ரத்து செய்யவும் அறப்போர் இயக்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜெ.பிரகாஷ்
மீனம்பாக்கம் vs பரந்தூர் விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
Comments are closed.