அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
பெரியார், காமராஜர், ஜெயலலிதா, அம்பேத்கர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, கல்வியாளர் ராமானுஜன், கவிஞர் பாரதி ஆகியோரை பற்றிய வாழ்க்கை வரலாற்று படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன.
அந்த வரிசையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்கலாம் என கூறியிருக்கிறார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர் முருகதாஸ்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 28-அன்று திறந்து வைத்தாா்.
நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு அமைக்கப்பட்டிருக்கிறது புகைப்படக் கண்காட்சி அரங்கம்.
திமுக உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினா்(1978), இளைஞரணிச் செயலாளர்(1982), தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினா்(1989), சென்னை மாநகராட்சி மேயா்(1996), திமுக பொருளாளா்(2015),
திமுக தலைவா்(2018), தமிழ்நாடு முதல்வா்(2021) என ஒரே ஃபிரேமில் அமைக்கப்பட்ட எட்டு புகைப்படங்கள் மு.க.ஸ்டாலின் இளமைக் காலம் முதல் தற்போது வரையிலான முகத்தோற்றங்களை பார்ப்போர் கண் முன் நிறுத்துகின்றன.
இந்த கண்காட்சி அரங்குகளை பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், திமுகவினா் என ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டு வருகின்றனா்.
பாா்வையாளா்களின் எண்ணிக்கை இதுவரை 35,000-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் நேற்றைய தினம் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை முழுமையாக பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தமிழின தலைவராக இருந்தபோதிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியவர் என்பது தமிழகத்தில் பிறந்த அனைவருக்கும் தெரியும்.
நாம் அறிந்திருந்த அந்த விஷயத்தை இந்த புகைப்படக் கண்காட்சியில் வந்து பார்க்கும்போது அவரோடு பயணித்த உணர்வை இந்தக் கண்காட்சி அளிக்கிறது.
மு.க.ஸ்டாலின் மேல் மிகுந்த மரியாதை உண்டாகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் இந்த வரலாற்றுப் பதிவை பார்த்து மகிழும்படி நான் வேண்டுகிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை இறந்த பிறகு எழுதிய கடிதத்தில் ஒவ்வொரு முறையும் உங்களை தலைவரே என்று அழைத்த நான் கடைசியாக ஒருமுறை அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா என்ற அந்த வரிகளை படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. சிறிய வயதிலேயே இளைஞரணிக்கு பொறுப்பேற்றிருக்கிறார்.
ஒரு தலைவரின் மகனாக இருந்தாலும் தனக்கென ஒரு போராட்டத்தை அமைத்து வெற்றிகண்டு மிகப்பெரிய இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
இந்த வரலாற்று பதிவுகளை பயோபிக்காக இந்திய அளவில் எடுக்க முடியும். அந்த அளவுக்கு பிரம்மாண்டங்களும் மனதை பாதிக்கும் சம்பவங்களும் இருக்கின்றன.
மிசா காலகட்டத்தில் அவர் அனுபவித்த போராட்டங்கள் துன்பங்களை பார்க்கும்போது ஒரு பயோபிக் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஷனாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.” என்றார்.
ராமானுஜம்