அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் ஆகிய மூன்று பல்கலைக் கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஆகஸ்ட் 17) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு என்.சந்திரசேகரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ஜி.ரவியும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு டி.ஆறுமுகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், துணைவேந்தராகப் பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருப்பர் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
துணைவேந்தர் என்.சந்திரசேகர்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக என்.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 35 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், 17 ஆண்டு நிர்வாக அனுபவமும் கொண்டவர்.
மேலும், பல்வேறு விருதுகள் பெற்றுள்ள சந்திரசேகர், 21 முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக 13 வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி தலைவராகவும், கேரளப் பல்கலைக்கழகம் ஒன்றில், டீனாகவும் பணியாற்றியவர்.
துணைவேந்தர் ஜி.ரவி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் ஜி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 27 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், நிர்வாகப் பணி அனுபவமும் கொண்டவர்.
8 ஆய்வுப் பணிகளை நிறைவேற்றி உள்ளதுடன், தேசிய, சர்வதேச மாநாடுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.
மேலும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுள்ளார்.
கல்விப் பணி, ஆராய்ச்சி தொடர்பாக 22 நாடுகளுக்கு சென்றுவந்தவர். 25 முனைவர்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
துணைவேந்தர் டி.ஆறுமுகம்
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீனாக இருந்த டி.ஆறுமுகம், தற்போது வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், 32 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், 11 ஆண்டு நிர்வாகப் பணி அனுபவமும் கொண்டவர். டி.ஆறுமுகம் சர்வதேச அளவில் 35 ஆய்வுக் கட்டுரைகளையும், தேசிய அளவில் 180 கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
22 புத்தகங்களை எழுதியுள்ளார். ரூ.15.56 கோடி மதிப்பிலான 14 ஆராய்ச்சி செயல்முறைத் திட்டங்களை நிகழ்த்தியுள்ளார். 8 முனைவர்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
–ஜெ.பிரகாஷ்
முதல்வரே வேந்தர்: சித்த பல்கலைக்கழக மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்