திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ,துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்குத் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர் என்று விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
இதுகுறித்து இன்று (டிசம்பர் 12) உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகத்தில் உள்ள 72 கழக மாவட்ட -மாநகரங்கள் ,புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மும்பை, ஆந்திரா, கர்நாடகா, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்கள் என கழக அமைப்பு உள்ள அனைத்து பகுதிகளில் இருக்கும் இளைஞர் அணி மாவட்ட மாநகர மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது மாவட்ட மாநகர மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர் பொறுப்புகளில் உள்ளவர் மீண்டும் அப்பொறுப்புகளுக்கு வர விரும்பினால் அவர்களும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
இப்பொறுப்புக்காக வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை நகலெடுத்து விண்ணப்பிக்கலாம். மாவட்ட கழகம், மாவட்ட அமைப்பாளர்களிடமிருந்தோ, அன்பகத்திலிருந்தோ விண்ணப்ப நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகவும் முழுமையாகவும் நிரப்பி பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ் நகல் இணைப்பது அவசியம்.
முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கழகத்திலோ, மாவட்ட அமைப்பாளரிடமோ டிசம்பர் 25ஆம் தேதி மாலை 6:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். அன்பகத்திலும் வழங்கலாம். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது.
நேர்காணல் அன்பகத்தில் நடைபெறும். நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா