ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நடைபெற்ற 67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார்.
பின்பு, அங்கிருந்து புறப்பட்டு மெல்போர்ன் நகரில் நேற்று (நவம்பர் 10) நடைபெற்ற மெல்போர்ன் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அப்பாவு, தேசியத்தையும், திராவிடத்தையும் பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
அப்பாவு பேசுகையில், “தேசியம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? என்பதில் சிலருக்கு ஐயப்பாடு உள்ளது. நாம் அனைவரும் இந்தியர்கள். தமிழராக இங்கே வந்திருந்தாலும்கூட தமிழ் உணர்வோடு இந்தியனாக வாழ வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசையும் எண்ணமும்.
அதை நான் இங்கே வந்த பிறகும் உணர்ந்துகொண்டேன். ஆகவே, அவற்றைப் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய மிகப் பெரிய அடையாளம் இந்தியா. உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடும் நம்முடைய இந்தியாதான். நமக்கெல்லாம் முகமாக இருந்து சுதந்திரத்தைப் பெற்றுதந்தவர் காந்தியடிகள்.
இந்த நாட்டிற்கென்று ஓர் அரசு உள்ளது. இந்த நாட்டிற்கென தனிச் சட்டம் உள்ளது. அந்த சட்டத்திட்டத்திற்குட்பட்டு நாம் வாழ்கிறோம். அவர்கள் நம்மை ஏற்றுக்கொண்டுள்ளனர். நாமும், அவர்கள் வகுத்திருக்கிற சட்டத்திட்டங்களுக்குட்பட்டு வாழ வேண்டும். வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தியாவிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் இங்கு வந்து, இந்த நாட்டின் அரசியலில் இருப்பவர்கள் குறித்து என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்ச் சமுதாயம் அவர்களை வாழ்த்துகிறது. தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் இந்தியாவிலிருந்து வந்த தமிழனாக இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வந்த தமிழன் என்ற ஒரு சொல் தான் மிகவும் முக்கியம். முதலமைச்சர் ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் 12-ஆம் வகுப்பு படித்த பெண் குழந்தைகளுக்கு மாதம் 1,000 ரூபாய் தருகிறார்.
அவர் நீங்கள் என்ன ஜாதி, மதம், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று கேளாமல், ஒரு தமிழன் வீட்டு பெண் குழந்தைகள் பட்டப்படிப்பு படிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் வழங்கி வருகிறார். தமிழ்நாட்டில் நகரப் பேருந்துகளில் பெண்கள் நாளொன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
அனைத்து மகளிரும் பயணம் செய்யலாம். ஏன் வெளிநாட்டிலிருந்து வந்த மகளிராக இருந்தாலும்கூட அவர்களும் இலவசமாக பயணம் செய்யலாம். இங்கு பிரச்சினைகள் இருந்தாலும், நாம் இந்தியராக இருப்போம். உணர்வுப்பூர்வமாக தமிழனாக வாழ்வோம். தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்தவர்களில் பெரும்பாலோர் பொறியியல் பட்டதாரிகளாக இருக்கிறார்கள். அவர்கள் தமிழ் பேசுவதில்லை. ஆனால், அவர்களை பொறியாளர்களாக்கி, இந்த நாட்டிற்கு அனுப்பியவர்கள் தமிழர்கள்தான்.
தமிழ் மொழி மட்டுமே தெரிந்த பலர், சிங்கப்பூர், மலேசியா. இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்றுள்ளனர். அங்கெல்லாம் அவர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களாக வாழ்ந்த காரணத்தினால் தான் இலங்கை, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாக தமிழும் உள்ளது.
மலேசியாவில் கூடுதல் ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது. அந்த அரசுகளுக்கெல்லாம் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த நாட்டு அரசு, Victoria School of Language என்ற அமைப்பின்மூலம், தமிழ் மொழி மட்டுமல்லாமல், இந்தியாவில் இருக்கிற பல்வேறு மொழிகளையும், கற்றுக்கொடுக்கின்ற உயர்ந்த பண்பை கொண்டுள்ளது.
அதற்காக இந்த அரசை உங்கள் சார்பாக பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இதே அமைப்பைப்போல் இந்தியாவிலும் ஏற்படுத்த வேண்டுமென்பது என்னுடைய ஆசையாகும். எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை மொழியினராக இருந்தாலும், அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொடுக்கிற வாய்ப்பை அவர்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும்.
தமிழ் படிப்பதற்கென்று உங்களுக்கு என்ன வசதி தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் செய்து கொடுப்பதற்கும் software மூலமாக படிப்பதற்கான வசதியையும் online மூலமாக படிக்கும் வசதியையும் செய்து கொடுப்பதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.
அதேபோன்று திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து, உரிய அனுமதி பெற்று எங்களிடம் தெரிவித்தால், முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று தமிழக அரசின் செலவிலேயே சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நீங்கள் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, இங்குவரும் தமிழ்ச் சொந்தங்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க வேண்டுமென்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்
இந்திய உணர்வு. தமிழர் உணர்வு, திராவிட உணர்வு சமூக நீதி உணர்வு 100 சதவிகிதம் இருக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வங்கக் கடலில் புயல் சின்னம்… அலர்ட் மக்களே!
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்… சாம்பியன் பட்டம் வென்றார் அரவிந்த் சிதம்பரம்