தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம் என்று அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதும், அதைத்தொடர்ந்து தனியார் ஹோட்டலில் சந்தித்து மன்னிப்பு கோரியதும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான இரண்டு வீடியோக்களும் கடந்த இரு தினங்களாக இணையத்தில் வைரலானது
நிர்மலா சீதாராமனிடம் சீனிவாசன் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியானதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்தநிலையில் தவறான தகவலை பரப்பியதாக கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் சதீஷ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த சூழலில் இன்று (செப்டம்பர் 14) மாலை அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் கௌரவ தலைவரும், தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கத்தின் துணைத் தலைவருமான சீனிவாசன், உணவகங்கள் மற்றும் பேக்கரியில் விதிக்கப்படும் மாறுபட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசிய வீடியோ வைரலானது.
இதைத்தொடர்ந்து மறுநாள் அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தனிப்பட்ட முறையில் நிதியமைச்சரை நேரில் சந்தித்து தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ சமூக வலைதளங்களில் கவன குறைவாக பகிரப்பட்டிருக்கிறது. இது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழக பாஜகவும் மன்னிப்பு கோரியுள்ளது. அந்த வீடியோவை எடுத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தேவையற்ற அனுமானங்கள் தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்.
இந்த விவகாரத்தை இதோடு முடித்துக் கொண்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம்.
எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் அன்னபூர்ணா விவகாரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று” என்று கூறியிருந்தார்.
முதல்வரின் பேச்சுக்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்ட வானதி சீனிவாசன், “கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின்தான் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் முதலமைச்சர் ஸ்டாலினை மன்னிக்காது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஹாட்ரிக் வெற்றி… செஸ் ஒலிம்பியாட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!
பொங்கல் பண்டிகை: விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள் – பயணிகளின் முக்கிய கோரிக்கை!