மன்னிப்பு கடிதம் அளித்து மீண்டும் கட்சியில் சேர்ந்து கொள்வது மூன்று பேருக்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதன் காரணமாக கட்சியில் இருந்து நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூலை 11) அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் மன்னிப்பு கடிதம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் அளித்தால் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்வது என்பது ஜெயலலிதா காலத்தில் இருந்தே உள்ளது. ஆனால் இந்த மன்னிப்பு கடிதம் மூன்று பேருக்கு பொருந்தாது.
ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூன்று பேரை தவிர மற்ற அனைவருக்கும் பொருந்தும். ஆனால் மன்னிப்பு கடிதம் அளிப்பவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்வது குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார்” என்று தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.
மோனிஷா