இலங்கை அதிபர் தேர்தல்: ரணில் விக்ரமசிங்கே பின்னடைவு… அனுர குமார திசநாயக்க முன்னிலை!

Published On:

| By Selvam

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்ச பதவி விலகினார். இதனையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார்.

அவருடைய பதவிக்காலம் வரும் நவம்பர் 19-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், 75 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பாக அனுர குமார திசநாயக்க ஆகியோர் என  மும்முனை போட்டி நிலவியது.

இந்தநிலையில், தேர்தல் முடிந்ததும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பல மாவட்டங்களிலும் அனுர குமார திசநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் முறையே மாறிமாறி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், அனுர குமார திசநாயக்க 7,99,746 வாக்குகளுடன் 48 சதவிகித வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அவரை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 4,66,407 வாக்குகளுடன் 26.9 சதவிகித வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், ரணில் விக்ரமசிங்கே 2,86,681 வாக்குகளுடன் 15.9 சதவிகித வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இன்று மதியத்திற்குள் இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்ற முடிவுகள் தெரியவரும்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீனவர் பிரச்சினை… ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்! – எச்சரித்த கே.பாலகிருஷ்ணன்

டாப் 10 நியூஸ்: இலங்கை அதிபர் தேர்தல் ரிசல்ட் முதல் தாம்பரம் மின்சார ரயில் ரத்து வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel