இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களில் முன்னிலையுடன் தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார்.
எனினும் அவரது என்பிபி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், தேர்தல் நடத்தி பெரும்பான்மை பெறும் நோக்கில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசாநாயக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் 1.17 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 65 சதவீத வாக்குகள் பதிவானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இத்தேர்தலில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையைப் பெற 113 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களைப் பெற வேண்டும்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும் வாக்கு வித்தியாசத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் தற்போது கம்பஹாவில் உள்ள 19 இடங்களில் 16 இடங்களில் முன்னிலை பெற்றதை அடுத்து அதிபர் அனுர திசநாயக்கவின் என்.பி.பி தனிப்பெரும்பான்மையைக் கடந்துள்ளது.
தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தேவையான 113 இடங்களை தாண்டி தற்போது என்.பி.பி 123 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி 31 இடங்களில் முன்னிலையுடன் 2வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சி 6 இடங்களிலும், புதிய ஜனநாயக முன்னணி 3 இடங்களிலும், ஸ்ரீலங்க பொதுஜன பெரமுன 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அரியலூரில் கள ஆய்வு : புதிய சிப்காட் தொழிற்பேட்டைக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!