நீட் எதிர்ப்பு நாடகத்தை திமுக தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக தற்போது நாடு முழுவதிலுமிருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் நீட் தேர்வு தொடர்பாக முன்னாள் நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மனதார வரவேற்பதாக இன்று (ஜூன் 3) நடந்த கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் பேசியுள்ளார்.
இதற்கிடையே நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை இன்று (ஜூலை 3) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, ஏகே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?
நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் அண்ணாமலை இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
’பொய் பேசுவதை நிறுத்துங்கள்’ : மோடிக்கு எதிராக ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளி!
2023 – 2024 ஒப்பீடு : முதல் அரையாண்டில் தமிழ் சினிமா சாதித்ததா? சரிந்ததா?