திமுக சார்பில் நவம்பர் 4ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ‘இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள்’ நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தியை தீவிரமாக திணிக்க வேண்டும் என்று அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு, குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்துள்ளதாக செய்தி வெளிவந்தவுடன் – இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக கழகத் தலைவர்தான் அதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்.
திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி, இது தொடர்பாக மாநிலம் முழுவதும் கடந்த அக்டோபர் 15ம் தேதி, அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
பிரதமருக்கு, முதல்வர் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி கடிதம் எழுதி – இந்த அறிக்கையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவரால் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக்கூடாது” என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, அன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை தமிழக மக்களிடையே விளக்கிடும் வகையிலும்,
– அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு அறிக்கையை ஏற்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருகிற நவம்பர் 4ஆம் தேதி, ’இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள்’ நடைபெறும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் (காஞ்சிபுரம்) பொதுச் செயலாளர் துரைமுருகன், எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் (தாம்பரம்) கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பியும்.,
தேனி தெற்கு மாவட்டத்தில் (ஆண்டிப்பட்டி) துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமியும் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.
ஜெ.பிரகாஷ்
பத்திரிக்கையாளர்கள் குரங்குகளா? அண்ணாமலைக்கு குவியும் கண்டனங்கள்!
கோவையின் மருமகளாக தமிழிசையின் வேண்டுகோள்: செவிசாய்க்குமா தமிழக அரசு!