ரவிக்குமார்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் 7 ஆம் தேதி ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே டிசம்பர் 5 ஆம் தேதி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தைப் பிரதமர் மோடி டெல்லியில் கூட்டியிருக்கிறார். இது நாடாளுமன்றக் கூட்டத் தொடரை எப்படி நடத்துவது என்பதை ஆராய்வதற்கான கூட்டம் அல்ல. ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்திருக்கிறது. அதைப் பற்றிய கூட்டம் இது.
ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வந்திருப்பதை ஏதோ பிரதமருக்கு மிகப்பெரிய சர்வதேச விருது கிடைத்ததைப்போல பாஜக முன்னிறுத்தப் பார்க்கிறது.
ஜி 20 கூட்டமைப்புக்குக் கடந்த ஆண்டு இந்தோனேஷியா தலைமை வகித்தது, அடுத்த ஆண்டு பிரேஸில் வகிக்கப்போகிறது. 2025 இல் தென்னாப்பிரிக்கா தலைமை வகிக்கும். இது சுழற்சி முறையில் வரும் ஒரு பொறுப்பு. தலைமை வகிக்கும் நாட்டுக்கென எந்தவொரு சிறப்பு அதிகாரமும் இல்லை.
ஆண்டு இறுதியில் நவம்பர் மாதத்தில் ஜி 20 நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் கூடும் கூட்டம் ஒன்றை தலைமை வகிக்கும் நாடு நடத்தும். அதில் சில தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள்.
இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடந்த கூட்டத்தையோ அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையோ யாராவது நினைவில் வைத்திருக்கிறோமா? அப்படித்தான் 2023 இல் டெல்லியில் நடக்கவிருக்கும் கூட்டமும் ஒரு சடங்கு.

உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் பார்க்கலாம்: 2022 நவம்பர் 15, 16 தேதிகளில் இந்தோனேஷியாவின் பாலியில் கூடிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 52 தீர்மானங்களில் 40 ஆவது தீர்மானம் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் குறித்ததாகும் “ அகதிகள் உட்பட புலம்பெயர்ந்தோரது பொருளாதார மீட்புக்காக, சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு முழு மரியாதையை உறுதி செய்வதற்கான எங்கள் அக்கறையை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்று அந்த தீர்மானம் கூறியது. “
எதிர்காலத்தில் ஜி 20 தலைமையை ஏற்கும் நாட்டின் கூட்டத்திலும் புலப்பெயர்வு, கட்டாய புலப்பெயர்வு பற்றிய உரையாடலைத் தொடர்வோம்.” எனவும் அந்தத் தீர்மானம் குறிப்பிட்டது. பாலிமாநாட்டில் பங்கேற்று இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா அகதிகளின் உரிமைகளை அங்கீகரித்திருக்கிறதா? அகதிகளுக்கென்று சட்டம் கூட இந்தியாவில் இல்லை. அதுமட்டுமின்றி அகதிகள் தொடர்பாக ஐநா சபை நிறைவேற்றிய இரண்டு தீர்மானங்களிலும் கையெழுத்திடாத நாடு இந்தியா.
தற்போதைய பாஜக அரசு கடுமையான எதிர்ப்புகளுக்கிடையில் இயற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் அகதிகளை மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும் பாகுபடுத்துவதாக இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே.
2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலக அளவிலான பொருளாதார நெருக்கடியின் காரணமாக உருவெடுத்து தான் இந்த ஜி 20 என்ற அமைப்பு. இதன் உறுப்பு நாடுகளில் ஏழ்மையைக் குறைப்பது, தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டே இது உருவாக்கப்பட்டது. வளரும் நாடுகள் பல இதில் இடம் பெறவில்லை.
இந்த அமைப்பின் மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானம் எதுவும் இதன் உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தாது. இதன் மாநாடுகளில் உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்தும் பல நேரங்களில் ஏற்பட்டதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகள் தமது அரசியல் திட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதற்கான ஒரு இடமாகவே இந்த மாநாடுகளைக் கையாண்டு வருகின்றன.

உதாரணமாக சொன்னால் பாலி மாநாட்டில் ரஷ்யா – உக்ரைன் யுத்தம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் அரசியல் நிலைப்பாட்டை காட்டுவதாகவே அமைந்தது. ரஷ்யாவின் ராணுவ தலையீட்டை கண்டித்துத் தீர்மானம் இயற்றிய இந்த மாநாடு அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகளைப் பற்றி எதுவும் பேசவில்லை.
பொருளாதார ரீதியில் எடுத்துக் கொண்டாலும் உலக அளவிலான பிரச்சனைகளாக இருக்கும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்; பெருமளவில் நிகழும் வரி ஏய்ப்புகள்; குறை வளர்ச்சி; அதிகரித்து வரும் வேலையின்மை முதலானவை குறித்து ஜி 20 மாநாடுகளில் உருப்படியான தீர்மானம் எதுவும் இயற்றப்பட்டது இல்லை.
கார்ப்பரேட் முதலாளிகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக சிறு குறு தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதன் மூலம் மேற்சொன்ன பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்; பயிற்சி பெற்ரவர்களுக்கு வங்கிகளோடு உரிய தொடர்புகளை ஏற்படுத்துவதன்மூலம் தொழில் தொடங்குவதற்கான மூலதனத்தை வழங்குதல்; அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உலக அளவிலான சந்தையோடு இணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றைஸ
ச் செய்வது ஜி 20 நாடுகளுக்கு பெரிய விஷயம் அல்ல.
ஆனால், இது குறித்து இந்த நாடுகள் அக்கறை காட்டியதில்லை. இந்த நாடுகளில் இருக்கும் வங்கிகள் கார்ப்பரேட்டுகளுக்குக் கடன் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவதிலிருந்து மாறி சாதாரண மக்களுக்குக் கடன் வசதிகளை செய்து தர முன்வர வேண்டும். அதுவும் இந்த மாநாடுகளில் கவனிக்கப்பட்டதில்லை.
உலக நாடுகளிடையே காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும் என்று ஜி 20 அமைப்பு உண்மையாகவே விரும்பினால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உலக அளவில் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலியல் பிரச்சனைகள் குறித்தும் இந்த மாநாடு அக்கறை காட்ட வேண்டும். ஆனால் அந்த விஷயத்திலும் இந்த ஜி 20 கூட்டமைப்பு எந்த முக்கியமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
எல்லாவற்றையும் தேர்தல் நோக்கிலேயே பார்க்கும் பாஜக ஜி 20 கூட்டமைப்புக்குத் தலைமை வகிக்க இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் இந்த சம்பிரதாயமான வாய்ப்பையும் தமது தேர்தல் ஆதாயத்துக்காகவே பயன்படுத்தப் பார்க்கிறது.
இப்போது கூட்டப்படும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அப்படித்தான் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது. ஏனெனில், பாஜக ஆட்சிக்கு வந்து கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு நவம்பரிலும் ஜி 20 மாநாடுகள் நடந்துள்ளன.
2014 இல் ஆஸ்திரேலியா அதன் பின்னர் துருக்கி,சீனா,ஜெர்மனி,அர்ஜெண்டினா, ஜப்பான்,சவுதி அரேபியா, இத்தாலி, இந்தோனேஷியா என அந்த 8 மாநாடுகளிலும் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தத் தீர்மானங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த நமது பிரதமர் என்ன முயற்சிகளை மேற்கொண்டார்? என்பதை இந்தக் கூட்டத்தில் இல்லாவிட்டாலும் அதன் பிறகாவது எதிர்க்கட்சிகள் கேட்கவேண்டும்.
கள்ளக்குறிச்சி கலவரம்: மீண்டும் திறக்கப்பட்ட பள்ளி!
ஜெ நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை!