இமாச்சல பிரதேச மாநில காங்கிரசின் வழிகாட்டுதல் குழுத் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா ராஜினாமா செய்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் அம்மாநில சட்டப்பேரவைக்கு முதல் முறையாக விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வரும் காங்கிரஸ் கட்சி, அதற்காக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் தலைமையில் பிரச்சாரக்குழுவை அமைத்தது.
இந்நிலையில் பிரச்சாரக்குழு தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் குலாம்நபி ஆசாத் ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஜி23 தலைவர்களில் ஒருவராக கருதப்படும் குலாம் நபி ஆசாத் பிரச்சாரக் குழு தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் , காங்கிரஸ் கட்சியில் மற்றொரு ஜி23 தலைவரான ஆனந்த் சர்மா, இமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள ஆனந்த் சர்மா, காங்கிரசில் தமக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கட்சியின் எந்த ஒரு கூட்டம் குறித்தும் தமக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், தாம் கூட்டத்திற்கு அழைக்கப்படுவதில்லை என்றும் ஆனந்த் சர்மா தனது கடிதத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இமாச்சல பிரதேச தேர்தலுக்கான காங்கிரஸின் வழிநடத்தல் குழுவின் தலைவர் பதவியில் இருந்து கனத்த மனதுடன் ராஜினாமா செய்துள்ளேன்.
நான் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரன் என்றும் எனது நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன் என்றும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
என் ரத்தத்தில் ஊறிப்போன காங்கிரஸ் சித்தாந்தத்தில் உறுதியாக இருக்கிறேன், இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!
இருப்பினும், தொடர்ந்து ஒதுக்கப்படுதல் மற்றும் அவமானப்படுத்தப்படுவதால், ஒரு சுயமரியாதை நபராக எனக்கு ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார்.
இது காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்