“எடப்பாடி பழனிசாமி எதிர்காலத்தில் இருக்க வேண்டிய இடமே வேறு” என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (செப்டம்பர் 20) பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் கோவை செல்வராஜ்,
அவரிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஜாதி குறித்துப் பேசியது தொடர்பாகவும், எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “சுப்புலட்சுமி ஜெகதீசன் எப்படி, அவராகவே திமுகவிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினாரோ, அதுபோல் சாதி குறித்துப் பேசியிருக்கும் செங்கோட்டையனும் தாமாகவே ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து வெளியேற வேண்டும்.
இல்லையென்றால், இதுதான் உங்களுக்குக் கடைசித் தேர்தலாக இருக்கும். இனி, ஒருநாளும் அவர் தேர்தலில் வெற்றிபெற முடியாது. எடப்பாடி பழனிசாமியும் சாதி வெறியுடன் செயல்படுகிறார்.
இவர்கள், ஒரு ஜாதியை வைத்துக்கொண்டு அதிமுகவை அழிப்பதை இனி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது அவரது சொந்த விருப்பம். அவர் அதிமுகவில் இருக்கும் காரணத்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்.
அவரது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் அவர் டெல்லி சென்றிருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது எனத் தெரியவில்லை.
ஆனால், அவரது முகத்தைப் பார்த்தால் ஏதோ ஒரு சோதனையால் தொங்கப் போட்டிருக்கிறார் எனத் தெரிகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தற்போது டெல்லி வேண்டிய சூழ்நிலை இல்லை. அதேநேரத்தில் டெல்லி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் உடனே செல்வார்.
கட்சித் தொண்டர்கள் தற்போதுதான் முடிவெடுக்கத் தொடங்கி உள்ளனர். ஜாதி அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமியை ஒட்டுமொத்த தொண்டர்களும் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லா சமூக மக்களையும் ஆதரிப்பவர்களே தலைவராக இருக்க முடியும். ஒரு ஜாதியை ஆதரிப்பவர்கள் தலைவராக இருக்க முடியாது.
ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டும் பேசும் இவர்கள் அரசியலில் மட்டுமல்ல, பொதுவாழ்க்கையிலும் ஈடுபடத் தகுதியானவர்கள் கிடையாது. பண்ருட்டி ராமச்சந்திரன் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி கிடையாது.
அவருக்கு மட்டுமல்ல, அவருடன் இருக்கும் யாருக்குமே தகுதி கிடையாது. அவர் அதிமுகவில் பணியாற்றிய காலத்தில் இவர்கள் எல்லோரும் அரைடவுசர் போட்டு விளையாடியவர்கள்.
இவர்களுக்கு அரசியலே தெரியாது. எடப்பாடி பழனிசாமி என்ன அரசியல் செய்திருக்கிறார்? இதற்கு முன்பு அவர் அதிமுகவுக்காக ஒரு சொட்டு வியர்வை சிந்தியிருப்பாரா? அவருக்கு அரசியலில் என்ன தகுதி இருக்கிறது. சசிகலா அவருக்கு முதல்வர் பதவியை வாங்கிக் கொடுக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் அவர் ரோடு சுற்றிக்கொண்டிருப்பார்.
இவரைப் பற்றி யார் பேசியிருப்பார்கள்? பண்ருட்டி ராமச்சந்திரன் எந்தக் கட்சியில் கால் வைத்தாலும் அது, ஆலமரமாக விருட்சம் பெறும். அதற்கு உதாரணம் பாமக மற்றும் தேமுதிக.
அது இரண்டும் வளர்வதற்கு பண்ருட்டி ராமச்சந்திரனே காரணம். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்குள் வந்தபிறகு, இந்தக் கட்சியையே நான்காகப் பிளந்துவிட்டார்.
எல்லோருடனும் சார்ந்துபோகும் எண்ணம் இல்லை. தான் என்கிற அகங்காரம், ஆணவம் அவரிடம் இருக்கிறது.
ஆணவம், அகம்பாவம் எல்லாம் ஒருபோதும் ஜெயித்தது கிடையாது. ஆகையால் அவர் எதிர்காலத்தில் இருக்க வேண்டிய இடமே வேறு இடம்தான்.
அந்த இடம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு அதிமுக நன்றாக இருக்கும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
அமித்ஷாவுடன் பேசியது என்ன? எடப்பாடி பழனிசாமி
தலைவர் தேர்தல் : சோனியாவை சந்தித்த சசி தரூர்