நெல்லைக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள் என்னென்ன?

Published On:

| By Kalai

ரூ. 370 கோடி மதிப்பில் திருநெல்வேலி மாநகர மேற்கு புறவழிச்சாலைத் திட்டம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ. 156.28 கோடியில் 727 பணிகளுக்கு இன்று (செப்டம்பர் 8) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரூ. 74.24 கோடி மதிப்பீட்டில் 29 முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார்.  ரூ. 117.78 கோடி மதிப்பில் 30,658 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

புதிய திட்டடங்கள் அறிவிப்பு

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கல்வி, வீரம், பழமை, ஆன்மீகம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் ஊராக நெல்லை திகழ்கிறது.

ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களை காட்சிப்படுத்த ரூ. 15 கோடி மதிப்பில் பொருநை அருங்காட்சியம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத்திட்டம் 2023 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும். வ.வு.சி, பாரதியார் பயின்ற பள்ளியை மேம்படுத்த ரூ. 1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பல்லுயிர் பூங்கா

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மணிமுத்தாறு அணை அருகே ரூ. 7 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அனைத்து வாழை விவசாயிகளும் பயனடையும் வகையில் ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும்,

திருநெல்வேலியில் விளையாட்டு வீரர்களை தேசிய, சர்வதேச அளவில் கொண்டு செல்லும் நோக்கில் ராதாபுரத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும். ரூ. 370 கோடி மதிப்பில் திருநெல்வேலி மாநகர மேற்கு புறவழிச்சாலைத் திட்டம் அமைக்கப்படும்.

முன்னோடி மாநிலம்

அனைத்து மாவட்டங்களும் வளர்வது தான் சீரான வளர்ச்சி. பின்தங்கிய தொகுதி என்று எதுவுமே இருக்கக்கூடாது. அதனால் தான் உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன்.

தமிழக அரசு கொண்டு வரக்கூடிய அனைத்து திட்டங்களும் இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டங்கள். எதையும் தொடங்குவதற்கு முன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் திட்டமிட்டு தொடங்கிய பிறகு அதை விரைவில் முடிக்கவேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை.

உதவக்கூடிய அரசு

எந்த தனிமனிதனுக்கு ஏற்படக்கூடிய குறையாக இருந்தாலும் அதை உடனடியாக தீர்க்கக்கூடிய அரசாக இருக்கவேண்டும் என்று அனைத்து அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களும் உத்தரவிட்டு இருக்கிறேன்.

கூட்டுறவு கடன்கள் தரப்பட்டு இருக்கிறது. வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு கடனுதவி, நகைக்கடன் தள்ளுபடி என ஒவ்வொரு தனிமனிதனின் வீட்டுக்கதவைத் தட்டி உதவக்கூடிய அரசாக திமுக அரசு இருக்கிறது.

நாம் அனைவரும் தமிழ் சமுதாயம் என்ற ஒற்றை குடும்பத்தின் உறுப்பினர்கள். அனைவரும் இணைந்து இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என்று பேசினார்.

கலை.ரா

எகிறும் கட்டணங்கள்- மாநில அரசே விமான சேவை தொடங்கலாம்: திமுக எம்.எல்.ஏ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share