விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா முதல்வர் ஸ்டாலினை இன்று (ஜூலை 14) சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து, ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூலை 13) நடைபெற்றது. முதல் சுற்றில் இருந்தே முன்னிலையில் இருந்த அன்னியூர் சிவா, 1,24,053 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.அன்புமணியை தோற்கடித்தார்.
திமுக வெற்றியைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்வீட் கொடுத்து வெற்றியை கொண்டாடினார்.
இந்தநிலையில் விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, ரவிக்குமார் மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன் கெளதம சிகாமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி,
“இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களிலேயே அன்னியூர் சிவா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த வெற்றி என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி.
மேலும், திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்தது தான் இந்த வெற்றிக்கு காரணமாகும்.
இந்த இடைத்தேர்தல் வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அன்னியூர் சிவா தனது வெற்றி சான்றிதழை வைத்து வணங்கினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம்… கடைசியாக தந்த திகில் வாக்குமூலம்!