அண்ணாசாலையில் மேம்பாலம்: பட்ஜெட்டில் அறிவிப்பு!

அரசியல்

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியான தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (மார்ச் 20) தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகை செப்டம்பர் முதல் வழங்கப்படும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒரு முக்கிய அம்சமாக தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை துறைகளுக்கான அறிவிப்பில், “வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும்.

பன்னாட்டுப் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளுக்கு மேல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும். இப்பணிகள் நிறைவுற்றவுடன், பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலைப் பாதுகாப்பும் மேம்படும்” என்று தெரிவித்தார் பழனிவேல் தியாகராஜன்.

பருவமழை மற்றும் வெள்ளக் காலங்களின்போது, போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க, 996 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 215 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை புறவட்டச் சாலை திட்டத்திற்காக 1,847 கோடி ரூபாயும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாயும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II க்கு 645 கோடி ரூபாயும் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு மொத்தம்19,465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

ஏப்ரல் 21 வரை சட்டப்பேரவை நடைபெறும்: சபாநாயகர்!

பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை கேட்டு ஓபிஎஸ் மனு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *