“அன்னபூர்ணா சீனிவாசனை பாஜக மிரட்டி மன்னிப்புக் கேட்க வைத்தது என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சொல்லுமானால், ஜெயலலிதாவும், கலைஞரும் முறையே கே.கே.எஸ்.எஸ்.ஆரையும், அஜீத்தையும் மிரட்டி மன்னிப்புக் கேட்க வைத்தனரா?” என்று பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் இன்று (செப்டம்பர் 18) கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சோசியல் மீடியாக்களில் எதிர்மறை அரசியல்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவையில் நடந்த ஜி.எஸ்.டி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபல ஹோட்டல் அதிபர் அன்னபூர்ணா சீனிவாசன், தனது உள்ளக்கிடக்கையை வெளிப் படுத்தினார்.
அவரின் பேச்சை, அமைச்சர் உட்பட அனைவரும் ரசித்தனர், பெருந்தன்மையாக அன்னபூர்ணா சீனிவாசன் பேச நினைத்ததை எல்லாம் பேச அனுமதித்தார் அமைச்சர். ஆனால், கலகலப்பாக அன்னபூர்ணா சீனிவாசன் பேசியதை, பாஜகவுக்கு எதிராகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் பேசியதாக திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சோசியல் மீடியாக்களில் பரப்பினர்.
ஜி.எஸ்.டி, தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு மறுநாள் அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார், அன்னபூர்ணா சீனிவாசன். கலகலப்பாகத் தான் பேசியதை சோசியல் மீடியாக்களில் எதிர்மறையாக அரசியல் கட்சிகள் பரப்பியதை சொல்லி, வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
ஆனால், அதைக் கொச்சைப்படுத்தும் விதமாக திமுகவும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீண்டும் பரப்பினார்கள். அதாவது, அன்னபூர்ணா சீனிவாசனை வலுக்கட்டாயமாக நிர்மலா சீதாராமன் வரவழைத்து, மன்னிப்புக் கேட்க வைத்தார் என்று கொச்சைத்தனமாக “ட்ரோல்” செய்தனர்.
அன்னபூர்ணா விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் இல்லை!
ஆனால், நிஜம் என்ன? அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திக்க வேண்டும் என்று அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டது அன்னபூர்ணா சீனிவாசன்தான். அவர் வருத்தம் தெரிவிக்கத்தான் வருகிறார் என்பது அமைச்சருக்குத் தெரியாது.
ஜிஎஸ்டி தொடர்பாக மேலும் சில விபரங்களைத் தெரிவிப்பதற்காகத் தான் நம்மைச் சந்திக்க நேரம் கேட்கிறார் என நினைத்து நேரம் ஒதுக்கினார் அமைச்சர். அதன்படி சந்தித்த அன்னபூர்ணா சீனிவாசன், கூட்டத்தில் நான் பேசியதை அரசியலுக்காக சிலர் எதிர்மறையாகப் பரப்பி வருகிறார்கள்.
இதில் எந்தத் தொடர்பும் எனக்கில்லை. இதில் எந்த அளவுக்கு நீங்கள் வருத்தப்பட்டிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் தான் தங்களைச் சந்தித்து வருத்தம் தெரிவிக்க விரும்பினேன் என சொன்னதுடன், வருத்தமும் தெரிவித்திருக்கிறார்.
அப்போது அமைச்சர், இதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நீங்கள் எந்தத் தவறும் செய்யவும் இல்லை. பிறகு எதற்கு வருத்தம் தெரிவிக்கிறீர்கள்? அதெல்லாம் தேவை கிடையாது. நீங்கள் இதைப் பெரிதாக எண்ணாதீர்கள். புறம் தள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்திருக்கிறார். இதுதான் நடந்தது. அப்பாயிண்ட்மெண்ட் கேட்டதும், வருத்தம் தெரிவித்ததும் அன்னபூர்ணா சீனிவாசன் தான். இதில் அதிகார துஷ்பிரயோகம் எதுவும் அமைச்சர் தரப்பில் நடக்கவே இல்லை. அதேசமயம், அந்த சம்பவத்திற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார்.
ஆனால், அமைச்சர் தான் வரவழைத்து மிரட்டி பணிய வைத்தார் என்று சம்பவத்தைத் திரித்து தங்களின் அரிப்பை திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் காட்டிக் கொண்டது. சரி, இந்த உண்மை ஒரு புறம் இருக்கட்டும்.
சில வரலாற்று நிகழ்வுகளை இந்தச் சந்தர்ப்பத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். புகைப்படத்தை வெளியிட்டது யார்?
1991 ஆம் ஆண்டு. கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீண்டும் அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் சேர்கிறார். அப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆரும் அவரது மனைவியும் ஜெயலலிதா காலில் விழுந்தனர். அதனை ஃபோட்டோ எடுத்து வெளியிட வைத்தார் ஜெயலலிதா. இதை என்னவென்று சொல்வீர்கள்?
அன்றைக்கு ஜெயலலிதா நடத்திய இந்தச் சம்பவத்தை தற்போதைய அதிமுக ஜெயக்குமாரும், சீனியர்களும் என்ன சொல்வீர்கள்? கே.கே.எஸ்.எஸ்.ஆரை மிரட்டிக் காலில் விழவைத்து அதனைப் பத்திரிகைகளுக்கு கொடுத்து அவர்களை ஜெயலலிதா கேவலப்படுத்தினார் என்று எடுத்துக்கொள்ளலாமா?
கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்ன தானாகவே காலில் விழுந்தாரா? காலில் விழுந்த அந்த புகைப்படத்தை ஜெயலலிதா தெரியாமல் யாரோ ஒருவர் வெளியிட்டு விட்டாரா?
அஜித் மிரட்டப்பட்டாரா?
அதேபோல, 2006-2011 காலக்கட்டத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, அவரது தலைமையில் நடந்த ஒரு படவிழாவில் கலந்து கொண்டு பேசினார் நடிகர் அஜீத்.
அவரது பேச்சு சில “காண்ட்ராவெர்சியை” உருவாக்கியது. இந்த நிலையில் சிலரின் அறிவுரையின் பேரில் மறுநாள் கோபாலபுரம் சென்ற நடிகர் அஜீத், மன்னிப்புக் கேட்டார் என்று செய்திகள் பதிவானது.
இந்த நிகழ்வை ஆராய்ந்தால், அஜீத்தை, கலைஞர் வரவழைத்தாரா? கலைஞர் சொல்லி மன்னிப்பு கேட்டாரா? திமுகவினர் கொடுத்த மிரட்டலை எதிர்கொள்ள முடியாமல் கலைஞரை அஜீத் சந்தித்தாரா? மிரட்டப்பட்டதால் தான் அவர் மன்னிப்புக் கேட்டாரா? இப்படி மேற்கண்ட இரண்டு சம்பவங்களையும் நம்மால் கேள்வி கேட்க முடியும்.
அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது விருப்பத்தின் பேரில் சந்தித்த சீனிவாசன் நிகழ்வை, உண்மைக்குப் புறம்பாக தி.மு.க. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு அரசியல் செய்வதை கவனிக்கும் போது, மேற்கண்ட பழைய நிகழ்வுகளுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?
அன்னபூர்ணா சீனிவாசனை மிரட்டி மன்னிப்புக் கேட்க வைத்தனர் என்பது உண்மை என திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சொல்லுமானால், ஜெயலலிதாவும், கலைஞரும் முறையே கே.கே.எஸ்.எஸ்.ஆரையும், அஜீத்தையும் மிரட்டி வரவழைத்து மன்னிப்புக் கேட்க வைத்தனர் என்று நாமும் சொல்லலாம் தானே?
இன்றைய கோவை சம்பவத்தில் மிரட்டப்பட்டார் என்பது சரி என்றால் அன்றைக்குப் போயஸ்கார்டன், கோபாலபுரம் சம்பவங்களும் மிரட்டலின் பின்னணியில் நடந்தது என்பது சரிதானே? இதற்கெல்லாம் தி.மு.க. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளிடம் என்ன பதில் இருக்கிறது?
நடந்த ஒரு சம்பவத்தின் உண்மை என்னவென்று தெரிந்தும், பாஜகவையும் அதன் சீனியர் அமைச்சரையும் திராவிட கட்சிகள் கொச்சைப்படுத்துவது கடைந்து எடுத்த அயோக்கியத்தனம். தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மாதிரி பாஜக தலைவர்கள் சிந்தித்தது கிடையாது.
அதற்கான அவசியமும் பாஜகவுக்கு இருந்ததில்லை. தன்னை எதிர்ப்பவர்களையும் அரசியல் எதிரிகளையும் கூட மரியாதையாக நடத்துவதும், அவர்களின் சுய கௌரவத்தினை மதிப்பதும் தான் பாஜக தலைவர்கள் கற்றுக்கொண்ட அரசியல். இதெல்லாம் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எங்கே தெரியப் போகிறது? அவர்களின் அறிவார்ந்த சிந்தனைகளுக்கே விட்டுவிடுகிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜம்மு காஷ்மீர் வாக்குப்பதிவு: மதியம் 1 மணி நிலவரம் என்ன?
என்னா வெயில்… சூரியன் ஓய்வெடுக்குமா?: வானிலை அப்டேட்!
சொந்த காசில் ஆப்பு வாங்கி தன் பின்னாடி சொருகிகொள்ளுவத்தில் பீசப்பிக்கி நிகர் பீசப்பி தான். அவன் பகிர்ந்த புகை படத்தில் கலைஞர் அஜித் இருவரும் சிரித்த முகத்துடன் காணப்படுகிறார்கள்.