ஸ்வீட், கார உணவு வகைகளுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசிய வீடியோ வைரலான நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி, கோவை கொடிசியா வளாகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர், பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகளுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். இதில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசும்போது, ” பன்னுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. ஆனால், அதில் வைக்கும் கிரீமுக்கு 18% ஜிஎஸ்டி வரி வசூலிக்கிறார்கள். ஸ்வீட், கார உணவு வகைகளுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமனிடம் இதுகுறித்து கேள்வி கேட்டபோது, “ஜிஎஸ்டி குறித்து சீனிவாசன் மிகவும் ஜனரஞ்சகமாக அவர் பாணியில் பேசியிருக்கிறார். அவர் பேசியதில் தவறு ஒன்றுமில்லை. அவரது ஜனரஞ்சகமான பேச்சு, ஜிஎஸ்டிக்கு பரம விரோதியாக இருப்பவர்களுக்கு ஆதாயமாக அமையும்.
நான் யாருடைய விமர்சனத்திற்கும் கவலைப்படுவதாக இல்லை. ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் முறையை எளிமையாக மக்களுக்கு கொண்டு செல்லும் வழிமுறைகளை யோசித்துக்கொண்டிருக்கிறோம்” என்று பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில், நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனை கோவை அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று (செப்டம்பர் 12) சந்தித்த அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், “நான் எந்த கட்சியையும் சேர்ந்தவனில்லை. ஜிஎஸ்டி குறித்த என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரிடம் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓணம் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்!
டாப் 10 நியூஸ்: கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு முதல் அப்பாவு மீதான அவதூறு வழக்கு வரை!