கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்ததற்காக, அவரைக் கூப்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோவும் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இது பாஜகவுக்கு எதிராக பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
அதேநேரம், ‘அன்னபூர்ணா சீனிவாசன் அந்த நிகழ்ச்சியில வானதி சீனிவாசன் பத்தி பேசினது நியாயமா? ‘எங்க கடைக்கு அவங்க கஸ்டர்மர். வருவாங்க, ஜிலேபி சாப்பிடுவாங்க, சண்டை போடுவாங்க’ என்று பேசியிருக்கிறார். வானதி சீனிவாசன் அன்னபூர்ணா ஓட்டலில் ஜிலேபி சாப்பிடுவதற்கும், ஜிஎஸ்டிக்கும் என்ன சம்பந்தம்?” என்று பாஜகவினரும் எதிர்க்கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் அன்னபூர்ணா சீனிவாசன் ஏற்கனவே இதேபோன்ற சர்ச்சையில் சிக்கி கோவை போலீஸ் கமிஷனரிடம் மன்னிப்பு கேட்டார் என்று சொல்கிறார்கள் கோவை போலீஸ் வட்டாரத்தில்.
அது என்ன?
“ஏ.கே. விசுவநாதன் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக 2012 காலகட்டத்தில் இருந்தபோது கோவையில் இருக்கும் ஏரிகள், குளங்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் தூர்வாரும் திட்டத்தை செயல்படுத்தினார்.
இதன்படி பொதுமக்களும் போலீஸாரும் இணைந்து ஏரிகள், குளங்களை தூர்வாரினார்கள். இந்த பணிக்காக அன்னபூர்ணா ஹோட்டல் சார்பில் 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை வழங்குமாறு போலீஸ் தரப்பில் கோரிக்கை வைத்தனர். அதை ஹோட்டல் நிர்வாகமும் ஏற்றுக் கொண்டது.
தூர்வாரும் பணிகளில் ஈடுபட்ட போலீஸார், பொதுமக்கள் ஆகியோருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. ஆனால் எல்லாருக்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீஸார் கேட்டபோது, ‘நீங்க கேட்டபடி 5 ஆயிரம் உணவுப் பொட்டலம் கொடுத்தாச்சு’ என்று ஹோட்டல் நிர்வாகத்தில் பதில் சொன்னார்கள். ‘3 ஆயிரம்தான் வந்திருக்கு’ என்று போலீஸார் தரப்பில் கேட்க, ‘போலீசெல்லாம் ஆளுக்கு ரெண்டு மூணு தின்னுட்டா மத்தவங்களுக்கு எப்படி இருக்கும்?’ என்று அன்னபூர்ணா சீனிவாசன் கேட்டார் என்று போலீஸ் மத்தியில் தகவல் பரவியது.
இது அப்போதைய கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் காதுக்கும் சென்று சேர்ந்தது. அதனால் கோபமான கமிஷனர் ஏ.கே.வி, ‘கோவையில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டல்களுக்கு முன் பகுதியில் நோ பார்க்கிங் போர்டுகளை வைத்துவிட்டார். அதனால் அன்னபூர்ணா ஹோட்டல்களுக்கு சாப்பிட வரும் யாரும் வண்டிகளை பார்க் செய்ய முடியவில்லை. அப்படி வண்டிகளை நிறுத்தினால் ஃபைன் போட்டனர் போலீஸார்.
இரண்டு நாட்கள் இப்படி செய்ய அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம் ஆடிப் போய்விட்டது. உடனடியாக அப்போது சீனிவாசன் கமிஷனரை சென்று சந்தித்து, ’நான் அந்த அர்த்தத்துல எதுவும் சொல்லலை. சாரி’ என்று கேட்டார். அதன் பிறகே அன்னபூர்ணா ஹோட்டல்கள் இயல்பு நிலைக்கு வந்தன. இப்படி ஒரு ஃபிளாஷ் பேக் அவருக்கு உண்டு” என்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கு : அமைச்சர் ஐ பெரியசாமி ஆஜராக உத்தரவு!
டிஜிட்டல் திண்ணை: ஜிலேபி முதல் மன்னிப்பு வரை… மிரட்டல், உருட்டல்! அன்னபூர்ணாவுக்கு நடந்தது என்ன?