தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (செப்டம்பர் 30) நள்ளிரவு சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
12நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை அதன்பிறகு இந்தியா திரும்புகிறார்.
தமிழக பாஜகவின் தலைவராக ஆக்டிவாக செயல்பட்டு வரும் அண்ணாமலை திடீரென சுமார் இரண்டு வாரங்கள் அரசியல் கட்சிப் பணிகளை தமிழ்நாட்டில் ஒதுக்கி வைத்துவிட்டு அமெரிக்கா செல்வதன் பின்னணி என்ன என்று பாஜக வட்டாரங்களில் விசாரித்தோம்.
“அண்ணாமலை அமெரிக்க பயணம் சில வாரங்களுக்கு முன் திட்டமிடப்பட்ட ஒன்றுதான். இது தொடர்பாக அவர் பாஜக தேசிய தலைமையின் அனுமதி பெற்ற பிறகு அமெரிக்கா புறப்பட்டுள்ளார்.
தலைமைப் பண்புப் பயிற்சி, அரசியல் மேலாண்மை உள்ளிட்ட சில பயிற்சிகளை அண்ணாமலை அங்கு மேற்கொள்ள இருக்கிறார்.
மேலும் அமெரிக்காவில் இருக்கும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களையும் அண்ணாமலை சந்தித்து உரையாடுகிறார்.
ஏற்கனவே அண்ணாமலை இலங்கை தமிழர் விஷயத்தில் சமீப காலமாக தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு வார கால இலங்கை பயணம் மேற்கொண்டது நினைவிருக்கும்.
மேலும் தமிழகத்தில் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சியிலும் தமிழக பாஜக தலைவராக முதல் முறையாக அண்ணாமலை பங்கேற்றார்.
இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அண்ணாமலை பல்வேறு ஈழத் தமிழர்களை தனிப்பட்ட முறையிலும் தமிழர் அமைப்புகளையும் சந்தித்து உரையாட இருக்கிறார்.
அப்போது கடந்த காலங்களில் ஈழத் தமிழர் விஷயத்தை வைத்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நடத்திய பண வேட்டைகளையும்,
ஈழத் தமிழர் விவகாரத்தை தங்களது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியது பற்றியும் ஈழத் தமிழ் மக்களிடம் விரிவாக கேட்டறிய இருக்கிறார் அண்ணாமலை.
இந்தப் பயணம் முடித்து தமிழ்நாட்டுக்கு வந்து ஈழ விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்த அரசியல் புயல்களை அண்ணாமலை வீச வைப்பார்” என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள் சிலர்.
இதே நேரம் பாஜகவிலேயே மேலும் சிலர், “கோவை உள்ளிட்ட இடங்களில் பாஜகவினரை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சுகள், போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,
அண்ணாமலை அமெரிக்க பயணம் மேற்கொள்வது தமிழக பாஜக சீனியர் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது” என்றும் கூறுகிறார்கள்.
வேந்தன்
தண்ணீரில் நடந்தால் அது அற்புதமா? – சத்குரு
கிச்சன் கீர்த்தனா : சாமை – பச்சைப்பயறு – நல்லெண்ணெய் சாதம்!