அதிமுகவுக்கு செல்லும் நிர்வாகிகள்: எடப்பாடிக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

Published On:

| By christopher

அதிமுகவின் ஒவ்வொரு வினைக்கும், நிச்சயம் எதிர்வினை இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 7) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மாநில பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல்குமார் அண்மையில் அண்ணாமலை மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவில் இணைந்தார். அவரைத்தொடர்ந்து பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து, இன்று அதிமுகவில் இணைந்தார்.

அதேபோன்று மேலும் சில பாஜக மாநில நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்து வரும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறுகையில், “பாஜகவின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களை திராவிடக் கட்சிகள் இழுத்து வருகின்றன.

திராவிடக் கட்சிகளின் இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியை தான் காட்டுகிறது.” என்றார்

மேலும், ”திராவிடக் கட்சிகளை சார்ந்து தான் பாஜக வளரும் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் இன்று பாஜகவிலிருந்து ஆட்களை எடுத்து சென்றால் தான் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது தான். அப்போதுதான் புதியவர்களுக்கு பதவி வழங்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ”பாஜகவினரை இணைத்துக்கொண்டு தாங்கள் வளர்ந்துவிட்டதாக காட்ட அதிமுக முயற்சிக்கிறது. பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். அவர்களின் ஒவ்வொரு வினைக்கும், நிச்சயம் எதிர்வினை இருக்கும்.” என்று அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஹோலி பண்டிகையில் ரஜினியுடன் படப்பிடிப்பை துவக்கிய லைகா!

சிராக் பாஸ்வானுக்கு ஆ.ராசா எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share