அண்ணாமலை vs செல்வப்பெருந்தகை : தலைவர்களின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்!

அரசியல்

நெல்லை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினரும், செல்வப்பெருந்தகை உருவ பொம்மையை எரித்து பாஜகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

செல்வப்பெருந்தகை முன்னாள் ரவுடி என்று அண்ணாமலை கூற, நான் ரவுடி என்று நிரூபிக்க முடியுமா? அண்ணாமலை மீது வழக்குத் தொடர்வேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடியாக,  செல்வப்பெருந்தகை மீதான குற்ற வழக்கு எண்களை அண்ணாமலை வெளியிட்டார். அவரது பதிவுக்கு பதிலளித்து வீடியோ வெளியிட்ட செல்வப்பெருந்தகை, அரைகுறை அண்ணாமலை என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 10) சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ செல்வப்பெருந்தகை என் மீது எந்த வழக்கையும் போடட்டும். அவரைப் பற்றி இன்னும் பல உண்மைகள் வெளியே வரும். அவர் மீது குண்டாஸ் போட்டது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் ஆர்.எஸ்.எஸ். போட்டதாக சொல்கிறார்.

ரிசர்வ் வங்கியின் கடைநிலை ஊழியராக இருந்த செல்வப்பெருந்தகை லண்டனில் என்னென்ன வாங்கியிருக்கிறார்? அவர் மனைவியின் பெயரில் எப்படி சொத்து வாங்கினார்? வேறு என்னென்ன சொத்துகள் இருக்கின்றன போன்றவை வெளியே வரும். ஒரு கட்சியின் மாநில தலைவர் இப்படி இருக்கலாமா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்படி வார்த்தை மோதல் முற்றி வரும் நிலையில், அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கோவை, நெல்லை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எதிரே கூடிய காங்கிரஸ் கட்சியினர், அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்தெறிந்து போராட்டம் நடத்தினர். அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

நெல்லையில் அண்ணாமலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  வண்ணாரப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள், “அண்ணாமலையை கண்டிக்கிறோம்” என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை இழுத்துச் சென்று தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

Image

மறுபக்கம் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜகவினர் செல்வப் பெருந்தகை உருவ பொம்மை எரித்து காங்கிரஸுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பெரம்பலூரிலும் செல்வப்பெருந்தகையின் புகைப்படத்தை எரித்து பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இரு கட்சி நிர்வாகிகளும் மாறி, மாறி மாநிலத் தலைவர்களின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவிப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

“திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவரின் கொலைக்கு காரணமானவர்களை இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அல்லது கண்டுபிடிக்காத தமிழக அரசை கண்டித்து போராட துப்பில்லை. உண்மையை உரக்கச் சொன்ன அண்ணாமலையை கண்டிக்கிறார்களாம். துப்பு கெட்ட காங்கிரஸ்” என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 

பிரியா

மலர் டீச்சர்… சாய் பல்லவிக்கு பதில் நடிக்க வேண்டியது யார் தெரியுமா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : மாலை 5 மணி நிலவரம் என்ன?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *