ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் தமிழக பாஜக தலைவர்களுக்கும் இடையே மீண்டும் வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இம்முறை அண்ணாவை அவமதித்ததாக கூறி அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு அண்ணாமலையும் கடுமையாக ரியாக்ட் செய்துள்ளார்.
கடந்த வாரம் சென்னையில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, “மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசினார். அப்போது முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடினர்” என்று பேசினார். அண்ணாமலையின் இந்தப் பேச்சு சர்ச்சையாக வெடித்துள்ளது.
அதிமுக தரப்பில் இதற்கு உடனடியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வினையாற்றினார்.
“நடக்காத ஒரு விஷயத்தைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார். பாஜகவை வளர்ப்பதற்காக உண்மைக்கு மாறான தகவல்களையும், மறைந்த தலைவர்களைப் பற்றியும் விமர்சிக்கக் கூடாது. ஏற்கனவே ஜெயலலிதா குறித்து இப்படி பேசி, பின்பு அண்ணாமலை மன்னிப்பு கேட்டார்.
பேரறிஞர் அண்ணா மிகவும் உன்னதமான தலைவர். அவரைப் பற்றி நடக்காத விஷயமாக, பசும் பொன் முத்துராமலிங்க தேவருடன் மோதல் ஏற்பட்டது என்கிறார். இது அண்ணா திமுக தொண்டர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. நடக்காத விஷயங்களை எல்லாம் நேரில் பார்த்தது போல அண்ணாமலை பேசுகிறார்.
ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதற்காக தீர்மானமே நிறைவேற்றினோம். அண்ணாவைப் பற்றி இழிவாக பேசுவதை பார்த்துக் கொண்டு அண்ணா திமுக தொண்டன் சும்மா இருக்க மாட்டான். ஆகையால் அண்ணாமலை தமது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
திமுகவின் கைக்கூலி அண்ணாமலை- சி.வி. சண்முகம்
இந்த நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “தமிழகத்தை வாழ்வித்த தலைவர் அண்ணாவை பற்றி நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். தமிழ்நாடு என்று இந்த மாநிலத்துக்கு பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும், தராதரமும் இல்லை.
அவர் சார்ந்த பாஜக அதிமுகவோடு கூட்டணியில் இருக்கிறோம் என்று தேசிய தலைமை அறிவித்திருக்கிறது. பாரத பிரதமர் மோடி எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு வர வைத்து தன் அருகிலே அமர வைத்திருக்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலே பாஜகவுக்கு அடுத்து இருக்கும் பெரிய கட்சி அதிமுக. இது மோடிக்கு தெரிந்திருக்கிறது, அமித் ஷாவுக்கு தெரிந்திருக்கிறது, நட்டாவுக்கு தெரிந்திருக்கிறது. ஏன் அண்ணாமலைக்கு தெரியவில்லையா?
எங்கள் அம்மாவை விமர்சனம் செய்தார். இப்போது அண்ணாவை விமர்சனம் செய்திருக்கிறார்.
அண்ணாமலைக்கு அண்ணாவைப் பற்றி என்ன தெரியும்? நீ எப்போது அரசியலுக்கு வந்தாய்? எங்கள் தலைவனை பேரறிஞர் அண்ணாவை திட்டமிட்டே இழிவுபடுத்துகிறீர்கள் என்றால் உங்கள் நோக்கம் என்ன? தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி அடையக் கூடாது என்று திமுகவோடு கை கோர்த்திருக்கிறார் அண்ணாமலை என்று தோன்றுகிறது.
இங்கே 40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் யாருக்கு நன்மை? இதை பாஜக தேசிய தலைமை உணர்ந்திருக்கிறது. அதிமுக துணையில்லாமல் நாம் வெற்றி பெற முடியாது என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றோ, மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றோ அண்ணாமலைக்கு துளியும் எண்ணமில்லை. திமுகவின் கைக் கூலியாக மாறிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.
ஐபிஎஸ்னா காந்திக்கு பக்கத்து வூடா?
அண்ணாமலை ஒரு பாத யாத்திரை போய்க் கொண்டிருக்கிறார். அது பாத யாத்திரையா, வசூல் யாத்திரையா என்று தெரியவில்லை. வசூல் யாத்திரை என்றுதான் பத்திரிகைகள் எழுதுகிறார்கள். அந்த யாத்திரை பற்றி பெரிதாக செய்திகள் வரவில்லை.
தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக, நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று வடிவேலு சொல்வதைப் போல அண்ணாமலை இப்போது பேசிக் கொண்டிருக்கிறார். நான் ஐபிஎஸ் ஆபீசர்னு சொல்றியே? ஐபிஎஸ்னா காந்தி வூட்டுக்கு பக்கத்து வீடா?
எத்தனை ஐபிஎஸ் ஜெயில்ல இருக்காங்க தெரியுமா? இறுதி எச்சரிக்கையாக சொல்கிறோம்… கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நீ இப்படியே பேசினால் எங்களுக்கும் ஒண்ணும் இல்லை ராஜா… எங்களுக்கு 2026 தான். இப்ப கூட்டணி தர்மத்துக்காக நாங்க உழைக்கிறோம்.
ஒரே ஒரு மனிதர் அண்ணாமலை மட்டுமே இந்த கூட்டணியை முறிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். இதேபோல அண்ணாமலை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் இதற்கு ஒரு முடிவுகட்டப்பட வேண்டும். முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று எங்கள் தலைமைக்கு வலியுறுத்துவோம்” என்று அண்ணாமலையை பங்கமாய் பேசினார் சி.வி. சண்முகம்.
இதேபோல மதுரை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அண்ணாவை பற்றி யார் பேசினாலும் நாக்கு அழுகிவிடும். எவன் பேசினாலும் அவன் நாக்கு அழுகிடும். சாதாரண மனிதர்கள் எல்லாம் இன்று அதிகாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பெரியாரும் அண்ணாவும்தான்” என்று பேசினார்.
மதுரை சம்பவத்துக்கு ஆதாரம் இருக்கிறது- அண்ணாமலை
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 17) கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை மீண்டும் சி.வி. சண்முகத்துக்கு பதிலளித்திருக்கிறார்.
“1956 இல் நடந்த அந்த சம்பவம் தொடர்பாக தி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த செய்திகள் என்னிடம் உள்ளன. நான் ஒரு விஷயம் சொன்னால் ஆதாரத்தோடுதான் சொல்லுவேன். அண்ணாதுரை மாபெரும் தலைவர்.
அண்ணா துரைக்கு நான்கு வளர்ப்புக் குழந்தைகள். நால்வரும் அரசியலுக்கு போகக் கூடாது என்று சொன்னார். அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? தமிழகத்தில் அண்ணாதுரையின் குடும்பத்தினரை எத்தனை பேருக்கு தெரியும். நான் சரித்திரத்தை சரித்திரமாக சொல்கிறேன். கருத்தை கருத்தாக பார்க்க வேண்டும். குடும்ப அரசியலை விடாதே என்று சொன்னவர் அண்ணா. நாங்கள் யாரையும் கடவுளாக பார்ப்பவர்கள் கிடையாது. எல்லாரும் மனிதர்கள்தான்.
என்னை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நான் யாருடைய அடிமையும் கிடையாது. யாரும் எங்களுடைய அடிமையும் கிடையாது. சனாதன தர்மத்தை ஆதரிக்காவிட்டால் நான் ஏன் இந்த பாஜக தலைவர் நாற்காலியில் அமரவேண்டும்? இன்னும் பல உண்மைகள் இருக்கின்றன. பெரியார் அடிவாங்கியதை சொல்ல முடியும். அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருந்ததை சொல்ல முடியும். அதுக்குள்ள நான் போகவில்லை. சரித்திரத்தை சரித்திரமாக பார்க்க வேண்டும்.
சாயந்தரம் ஆறு மணிக்கு மேல வேற மாதிரி பேசுவார் சண்முகம்
மிரட்டல் உருட்டல் எல்லாம் என்னிடம் வேலைக்கு ஆகாது. எனக்கும் கடும் சொற்கள் வரும். சி.வி. சண்முகம் சாயந்தரம் ஆறு மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார், ஆறு மணிக்கு முன்னர் வேறு மாதிரி பேசுவார். பத்து வருடம் துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையை பற்றி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். அவர் மந்திரியாக இருந்தபோது என்னென்ன பண்ணினார் என எனக்குத் தெரியும்.
என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் விட மாட்டேன். கூட்டணி முக்கியம்தான். கூட்டணியில் இருந்தால் கொள்கை மாறுபாடுகள் இருக்கும். அதற்காக அடிமையாக எல்லாம் இருக்க முடியாது. 50 வருடம் அரசியலில் இருந்தால் உங்கள் காலில் விழவேண்டுமா? கூனிக் கும்பிட்டு பவருக்கு வரவேண்டிய அவசியம் பாஜகவுக்கு கிடையாது. ஜூனியர்களை தூண்டிவிட்டு பேசுபவன் அல்ல அண்ணாமலை. மாநிலத் தலைவரான நானே வருவேன்…
பாஜக 2026 இல் பவருக்கு வரும். எங்களுக்கென்று தனிக் கொள்கை, சனாதனம் எங்கள் உயிர் மூச்சு. எங்களோட கூட்டணி இல்லைன்னா தமிழ்நாட்ல டிவிஏசி இருக்கு” என்று சி.வி., சண்முகத்துக்கும் அப்படியே எடப்பாடிக்கும் சேர்த்து பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.