கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு 15 நாள் சிறை : அண்ணாமலை கண்டனம்!

Published On:

| By christopher

திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் குறித்து இழிவாக பேசியதுடன், மிரட்டலும் விடுத்தார்.

தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட உத்தம ராமசாமி, கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியிருந்தார். இதுகுறித்தான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

இதனையடுத்து, ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வீடியோ ஆதாரத்துடன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை இன்று காலை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

மேலும் கலவரத்தை தூண்டுதல், வேண்டுமென்றே அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

15 நாள் நீதிமன்ற காவல்!

அதன் பின்னர் பாலாஜி உத்தமராமசாமியை கோவை ஸ்ரீராம் பகுதியில் உள்ள நீதிபதி செந்தில் ராஜா வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது உத்தம ராமசாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதனையறிந்த பாஜக தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையம் மற்றும் கோவை மத்திய சிறை முன்பும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்!

இதற்கிடையே உத்தமராமசாமியின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை.

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் அவரை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்?

திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ராகுல் நடை பயணத்தால் நிச்சயம் மாற்றம் வரும் : அன்புமணி

சமாதானப்படுத்தாத ஸ்டாலின்: சண்டையிட்டு கிளம்பிய சுப்புலட்சுமி: 23 நாட்கள் நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel