நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை, வேலுமணி சந்திப்பு: இதுதான் பின்னணி!

அரசியல்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஏப்ரல் 1)  சென்னையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு… இன்று ஏப்ரல் 2  காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

நேற்று சென்னை வந்த நிர்மலா சீதாராமன், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது ஆதரவாளரான கே.டி.ராகவனை சந்தித்து சில நிமிடங்கள் தனியாக உரையாடினார். அதன் பின் காஞ்சி மாவட்டம்  பழையசீவரம் கிராமத்துக்கு சென்ற அவர் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தை சுவரில் வரைந்து வைத்து ’பூத்’ துகளை பலப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின் திருமுக்கூடல் பெருமாள் கோயிலுக்கு சென்றார்.  நிர்மலா சீதாராமனுடன் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,  மாநில செயலாளர் வினோஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். 

தனது சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று  காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன். 

இதற்கிடையே கர்நாடக மாநில தேர்தல் பணிகளுக்காக சென்றிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

கடந்த வாரம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தபோது பிரதமரின் ஜவுளி பூங்கா திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலினுடன் சேர்ந்து தொடங்கி வைத்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் கோயலை சந்திக்கவில்லை. அது கட்சிக்குள் பேசுபொருளானது. 

இந்த நிலையில்… இந்த வாரம் சென்னைக்கு வருகை தந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திக்க இயலாமல் போய்விடக் கூடாது என்பதற்காக  பெங்களூரில் இருந்து விரைந்து வந்து விமான நிலையத்திலேயே சந்தித்துள்ளார் அண்ணாமலை.

மேலும் அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி இன்று சென்னையில் இருந்து கோவை புறப்படுவதற்காக விமான நிலையம் சென்றார். அப்போது விமான நிலையத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருப்பதை அறிந்து அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு அரசியலில் அதிமுகவுடன் பாஜகவின் கூட்டணி தொடரும் என்று சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இதை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் திடீரென்று நடந்த இந்த இரு சந்திப்புகளும் சூழல் கருதி முக்கியத்துவம் பெற்றுள்ளன.

வேந்தன்

”12 ஆண்டுகளுக்கு முன்பு… நீங்கள்?”: சச்சின் கேட்ட கேள்வி!

நாடாளுமன்ற தேர்தல்: “9 தொகுதிகளுக்கு டார்கெட்”: எல்.முருகன்

+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *